உள்ளிருந்தும் புறமிருந்தும் வரும் சவால்களை சந்தர்பங்களாக கருதி முன்னே செல்லுங்கள்..!

யன்றவரை இறையச்சத்துடனும், இதயசுத்தியுடனும், அர்பணிப்புடனும் உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்கும் நீங்கள் எவ்வளவுதான் அறிவுபூர்வமாகவும், சமயோசிதமாகவும் சத்தியவழி நின்று செயற்பட்டாலும் உங்களுக்கான அங்கீகாரம் சத்திய சோதனைகளிற்கு பின்னரே கிடைக்கும், சிலவேளை உங்கள் மறைவிற்குப் பின்னரே உணரப்படும் அல்லது மறுமை வாழ்விலேயே பரிபூரணமாக கிடைக்கும்.

உங்கள் வாழ்வில் பல ஹிஜ்ராத்துக்களும், தவ்ர் குகைகளும், உஹதுகளும் கந்தக்குகளும் பதுருகளும் இருப்பதுபோல் ஈற்றில் ஹுதைபியாக்களும் மக்கா வெற்றியும் இன்ஷாஅல்லாஹ் இருக்கும்.

மனிதர்களது திருப்தியை, அங்கீகாரத்தை எதிர்பார்த்து மனிதநேய, பொதுநல பணிகளில் ஈடுபடும் பொழுது மனதிருப்தியிற்குப் பதிலாக மன அழுத்தமே அதிகரிக்கும், மாறாக இயன்றவற்றை இயன்றவரை மாத்திரமன்றி, செய்ய வேண்டியவற்றை இயன்றவரை தனியாகவும் கூட்டாகவும் இதய சுத்தியோடு இறைவனுக்காக செய்கின்ற பொழுது மனதில் நிறைவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

எமது உளத்தூய்மையான செயற்பாடுகள் அத்தனைக்கும் ஏதோ ஒரு வகையில் ஏதேனும் ஒரு துறையில் பிரதிபலன்களும் விளைவுகளும் மறு உலக வாழ்வில் மாத்திரமன்றி இவ்வுலகிலும் இருக்கவே செய்கின்றன, எந்தவொரு நல்ல செயற்பாடும் வீண் போவதில்லை, அத்தகைய இயற்கை நியதிகளூடாகவே இந்தப் பிரபஞ்சம் இறைவனால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சந்திக்கின்ற தோல்விகள், பின்னடைவுகள் மாத்திரமல்ல, இழைக்கப்படுகின்ற அநீதிகளும், பாரபட்சங்களும், புறக்கணிப்புக்களும், எதிர்கொள்கின்ற ஏமாற்றங்களும், அவமானங்களும் கூட ஒரு மனிதனை விரைவாக வெற்றியின் படிகளில் உயர அழைத்துச் செல்லும், சகிப்புத் தன்மையும், பொறுமையும், நிதானமும், விடா முயற்சியும் ஒரு நாள் அமைதியும், சந்தோஷமும் நிறைந்த அழகியதொரு வாழ்வை அவனுக்காக காத்திருக்கச் செய்யும், இன்ஷா அல்லாஹ்.

இவை இறைவன் வகுத்த இயற்கை நியதிகளில் உள்ளவை, எல்லாம் வல்ல இறைவன் மீதுள்ள ஆழமான விசுவாசம் "தவக்குல்" எல்லா சோதனைகளின் பொழுதும் மேற்சொன்ன பண்புகளை ஒருவருக்கு நிறைவாக வழங்குகின்றது.

பொது வாழ்வில் ஈடுபடும் பொழுது விமர்சனங்கள் கணைகளாக தொடுக்கப்படுவது ஒன்றும் புதியவையல்ல, சகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய ஆக்கபூர்வமான நேரிடையான விமர்சனங்களை விட, காழ்ப்புணர்வு பொங்கியெழும் காரியத்தைக் கெடுக்கும் எதிர்மறையான விமர்சனங்களும் எங்களை நோக்கி விடுக்கப்படும்.

இலட்சியப் பயணத்தில் நாம் எதிர்கொள்கின்ற அத்தனை விமர்சனகளும் அவை நேரிடையாக இருந்தாலும், எதிர்மறையனவையாக இருந்தாலும் சரியே, அத்தனை சவால்களும் எங்களது பாதையையும் பயணத்தையும் இன்னுமின்னும் தெளிவாகவும் விவேகமாகவும் முன்னெடுப்பதற்கான சாதகமான சமிக்ஞைகளாகவே பார்க்கப்படல் வேண்டும்.

பெரும்பாலான காழ்ப்புணர்வு கலந்த விமர்சனங்களிற்கு கருத்துக்களால் எதிர்வினையாற்றல்களால் பதில் சொல்வதனைவிட விடுத்து எமது செயற்பாடுகளால், பிரயோகங்களால், அமுலாகங்களால், சாதனைகளால் பதில் சொல்வதே ஆரோக்கியமான அணுகுமுறையாகும், அதேவேளை ஆக்கபூர்வமான அறிவுபூர்வமான விமர்சனங்களை அங்கீகரித்து அமுலுக்கு கொண்டுவருவது சிலவேளைகளில் அவற்றை முன்வைக்கும் பார்வையாலர்களை கூட எமது பயணத்தில் பங்காளிகளாக ஆக்கிவிடுகின்றன.

பயணத்தின் பொழுது அதிகாரம் செல்வம் செல்வாக்கு உடைய பல சந்தர்ப்பவாதிகள் கூட பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் எம்மோடு இணைந்து கொள்ளலாம், அவர்கள் எமது சுலோகங்களையும், இலக்குகளையும் எம்மை விடவும் வீரியத்துடனும் முழுவீச்சுடனும் தூக்கிப்பிடிக்கலாம், அவர்களது நயவஞ்சகமான செயற்பாடுகள் குழுமச் செயற்பாடுகளில் எங்களைக் கூட புரியப்படாதவ்ர்களாக, அந்நியப்படுத்தப் பட்டவர்களாக மாற்றிவிடலாம், என்றாலும் நாம் சளைத்துவிடலாகாது.

சில வேளைகளில் போராட்டங்களின் முன்னோடிகளாக நீங்கள் இருந்த பொழுது உங்களைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள், குழப்பக்காரர்களோ என்று புரளிகளை கிளப்பியவர்கள் உங்களை தலை தூக்கவிடாது நிம்மதி நித்திரையின்றி தவித்தவர்கள் உங்கள் அழிவையும், வீழ்ச்சியையும் காணத்துடித்தவர்கள் உங்கள் முதுகுகளில் ஏறி சௌகரியமாக சவாரி செய்வதையும், நீங்கள் போடும் மேடைகளில் ஏறி உங்களுக்கே உபதேசம் செய்கின்ற அற்புதத்தையும் நீங்கள் காண்பீர்கள்.

அதேபோன்றே முன்னோடிகளை விடவும் சிறந்த தகைமைகளும்,அறிவும் ஆற்றலும் அர்பணிப்பும் நிறைந்த நன்மக்களும் உங்கள் பயணத்தில் உங்களோடு இணைந்து கொள்ளலாம், அவர்களை நீங்களும், உங்களை அவர்களும் பரஸ்பரம்புரிந்து கொள்கின்ற அங்கீகரிக்கின்ற பக்குவமும் பண்பாடும் காலவோட்டத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

தேசிய சமூக ஆன்மீக வாழ்வில் பேசப்படுகின்ற இலக்குகள், கோட்பாடுகள் , சிந்தனைகள் செல்நெறிகள் கருத்துக்களாக இருக்குமட்டும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துச் செல்லவும் அவை முரண்பாடுகளாக விரிசல்காளாக பரிணாமம் பெறவும் அதிகரித்த வாய்ப்புக்கள் இருக்கின்றன, மாறாக அமுலக்கங்களில் அதிகரித்த கரிசனை செலுத்தப் படுகின்ற பொழுது வேறுபாடுகள் உடன்பாடுகளாக மாறுவதற்கு அதிகரித்த வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஏனென்றால் இன்று சௌகரியமாக கருத்துக்களை சொல்வதற்கு அதிகமானோர் காத்திருக்கின்றனர், சிலர் முரண்படுவத்ற்காகவே காத்திருக்கின்றார்கள், ஆனால் யதார்த்தபூர்வமாக அரசியல் சமூக பொருளாதார அறநெறிப் பணிகளில் இதய சுத்தியோடும், அர்பணிப்புகளோடும் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றார்கள், அவர்களுக்கே கருத்தக்களோடு களநிலை யதார்த்தங்களும் தெளிவாக புரிகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -