இளைஞர் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் இளைஞர் காங்கிரஸ் குழுக்கள் புதிதாக தெரிவு செய்யப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (11) அறிவித்துள்ளது.
இளைஞர்களை வலுவூட்டி அவர்களது தலைமைத்துவ ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் சனிக்கிழமை 14 ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை 20 ஆம் திகதி வரை இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் தலைமையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று அம்பாறை மாவட்டத்தின் அனைத்து ஊர்களுக்கும் விஜயம் செய்து, இளைஞர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் இளைஞர் காங்கிரஸ் குழுக்களை தெரிவு செய்யவுள்ளனர்.
தெரிவு செய்யப்படும் இளைஞர் காங்கிரஸ் குழுக்களின் மூலமாக இளைஞர்களோடு தொடர்புபட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதோடு, இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப்பட்டறைகளும் நடத்தப்படவுள்ளன.
அந்தவகையில் கீழ்வரும் தினங்களில் முஸ்லிம் காங்கிரஸின் குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து ஊர்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
- பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு சனிக்கிழமையும்
- பாலமுனை, ஒலுவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் விஜயம் செய்யவுள்ளனர்.
- இறக்காமம் மற்றும் வரிப்பதான்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு திங்கட்கிழமையும்,
- சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் விஜயம் செய்யவுள்ளனர்.
- மாவடிப்பள்ளி மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களுக்கு புதன்கிழமையும்,
- மத்திய முகாம் மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்கு வியாழக்கிழமையும் ,
- மருதமுனைக்கு வெள்ளிக்கிழமையும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.