மு.காவிற்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் அக்கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் உயர்பீட உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலமாக உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதென்றுதான் சொல்லுதல் பொருத்தமாகும்.
மெல்ல ஆரம்பித்த கருத்து முரண்பாடுகள் தேசியப்பட்டியல் எனச் சுற்றிவளைந்து செயலாளருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று சூறாவளியாக மாறிக் கொண்டிருந்த சூழலில் பசீர் சேகு தாவூத் எழுதிய உயர்பீட உறுப்பினர்களுக்கான கடிதத்தின் மூலமாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகள் வலுப் பெற்றுள்ளது. தற்போது இந்த முரண்பாட்டுப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மு.காவின் முன்னாள் செயலாளர் டாக்டர் ஹப்ரத், முன்னாள் தவிசாளர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் சிலரும் இணைந்து கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை மாற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. அத்துடன் ஹப்ரத், அதாவுல்லா போன்றவர்கள் கட்சியிலிருந்து விலகிச் சென்றார்கள். இது போன்று பல உள்ளக முரண்பாடுகளை மு.கா சந்தித்துக் கொண்டது. அம்முரண்பாடுகளின் போது இன்று ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ஏற்படவில்லை.
இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்ட போது இன்றைய உள்ளக முரண்பாட்டிற்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் மு.காவின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஆகியோர்கள் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமை பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக தோழ் கொடுத்தார்கள்.
அன்று ஏற்பட்ட முரண்பாடுகள் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரானதாகவே இருந்தன. இதன் போது தலைவரோடு முரண்பட்டுள்ளவர்கள் பதவிகளுக்காகவே தலைவருக்கு எதிராக முரண்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஹஸன்அலி, பசீர் சேகுதாவூத் முதல் அதிகமான உயர்பீட உறுப்பினர்களினாலும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் நாட்டிற்கும் தெரிவிக்கப்பட்டன.
அதனை நிரூபிக்கும் வகையில் மு.காவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனிக் கட்சிகளை அமைத்து அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டார்கள்.
இன்று மு.காவிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆரம்பத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் முடிச்சுப் போடப்பட்டது. அதில் உண்மையும் இருந்தது. ஆனால், போடப்பட்ட முடிச்சுக்கள் மெல்லமெல்ல அவிழ்ந்து மு.காவின் பொதுச் செயலாளர் ஹஸன்அலிக்குரிய அதிகாரங்களை குறைத்தமை அநியாயமானதென்று பலராலும் சொல்லப்படும் ஒரு நிலையை அடைந்துள்ளது.
இவ்விடத்திலிருந்து கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் நியாயத்திற்கான ஒரு போராட்டம் என்று காட்டப்படுகின்றது. அத்தோடு தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான போராட்டமும் அல்ல எனவும் தற்போதைய முரண்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனை பசீர் சேகுதாவூத் தான் எழுதிய கடிதத்தில் தெளிவதாக வாசிக்கும் நபர் ஏற்றுக் கொள்ளும் மனப் போக்கில் முன் வைத்துள்ளார். இதற்கு முதல் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது தலைவர் ரவூப் ஹக்கீமின் பக்கத்தில் நியாயம் இருந்தது. அதனால் அவர் பக்கம் நின்று நியாயத்தை அடைந்ததாகவும், தற்போது ஹஸன்அலியின் பக்கம் நியாயம் இருப்பதனால் அவருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை எடுப்பதாகவும் பசீர் சேகுதாவூத் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, பசீர் சேகுதாவூத்தின் பல வியாக்கியானங்களுக்கு தாறுமாறாக வெளுத்துக் கட்டியவர்கள் அவர் எழுதிய உயர்பீட உறுப்பினர்களுக்குரிய கடிதம் குறித்து வாயைக் கூட திறக்காது மௌனித்துப் போயுள்ளார்கள். தங்களது மௌனத்தின் மூலமாக பசீர் சேகுதாவூத்தின் கடித உள்ளடக்கம் உண்மையென்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
பசீர் சேகுதாவூத் எழுதியுள்ள கடிதத்தில் எந்தவொரு இடத்திலும் ரவூப் ஹக்கீமை நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் பற்றியும், செயலாளரின் அதிகாரங்கள் குறைத்தமை ஒரு நாடகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மு.கா எனும் கட்சி முஸ்லிம்கள் உயிர் இழப்புக்களினாலும், இடப்பெயர்வினாலும், துயரங்களினாலும் வளர்க்கப்பட்டதென்ற உண்மையையும் வெளிப்படுத்தி உயர்பீட உறுப்பினர்களின் மனதைத் தொட்டுள்ளார்.
இதனால்தான், பசீர் சேகுதாவூத்திற்கு எதிராக பிரம்பெடுத்து சுழற்றிக் கொண்டிருந்தவர்கள் உட்பட கட்சியின் அனைத்து உயர்பீட உறுப்பினர்களும் அக்கடிதம் தொடர்பில் பேசாதிருப்பதே சிறந்ததென்ற எண்ணத்தில் உள்ளார்கள் என்று கருதவும் இடமுண்டு.
மேலும், பசீர் சேகுதாவூத் எழுதிய கடிதத்தில் “ஹக்கீம் – ஹாபிஸ் நஸீர் அஹமட் போட்டியில் நஸீர் நூற்றுக்கு நூறு வீதம் பிழை என்பதை இனங்கண்டு தலைவரின் பக்கம் உயிர் கொடுக்க தயாராய் நின்றேன். தலைவர் ஹக்கீம் அவர்கள் ஒரு நாள் கபீல்ட் பொலிஸ் தலைமையக மைதானத்தில் உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மைதானத்துக்குள் நுழைந்த ஹாபிஸ் நஸீர் தலைவரைப் பார்த்து உங்களைத் தொலைக்காமல் விடமாட்டேன் என்று சவால் விட்டார்.” என்று தெரிவித்துள்ளதுடன் “ஹஸனலி கட்சியின் ஸ்தாபக உறுப்பினர். ஆதி முஸ்லிம் காங்கிரஸ்காரர்.
30 ஆண்டுகளாக முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரியாதவர். கட்சிக்கு தீங்கிழைக்காதவர், இரண்டு தலைவர்களுக்கும் தூணாக துணை நின்றவர். கட்சியின் எந்த உறுப்பினரோடும் குரலை உயர்த்திக் கூட பேசாத குணக்குன்று. வேறு எவரும் செய்திராத, கட்சி தொடங்கிய காலம் தொட்டு இன்று வரையான ஆவணங்களை சேர்ப்பதே தனது முதல் பணி என்று அத்தனையையும் சேகரித்து வைத்திருக்கும் நமது ஆவண ஞானி” என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக கட்சிக்கும், தலைவருக்கும் துரோகம் செய்தவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவியும், அரசியல் அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை, கட்சிக்காகவும், தலைவர்களுக்காகவும் நம்பிக்கையுடன் நடந்து கொண்டவர்களுக்கு கழுத்தறுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹஸனலியை காலி டப்பாவாக்கி, செயலாளர் நாயகம் பதவி அப்படியே இருக்க யானை தின்ற விளாங்காய் போல அப்பதவியை வெறும் கோதாக்கி, சாற்றை பிழிந்து எடுத்து சக்கையாக்கி, சம்பிரதாய பதவி நிலையாக இதனைக் கீழிறக்கி வைக்கப்பட்டுள்ளது. பிழிந்தெடுத்த சாறு இதுவரை காலமும் உச்ச பீடத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்காதவரும், அனுபவம் இல்லாதவருமான ஒருவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனூடாக மன்சூர் ஏ. காதர் கட்சியின் செயலாளர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்று தெரிவித்துள்ளார். மறுவார்த்தையில் சொன்னால் மன்சூர் ஏ.காதர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார் எனலாம்.
இவ்வாறு உயர்பீட உறுப்பினர்களுக்கு மிகவும் நுணுக்கமாக கடிதம் எழுதிய பசீர் சேகுதாவூத் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை தீர்க்காது விட்டால் கட்சி பிளவுபடுமென்றும், எதிர்வரும் தேர்தலில் கட்சி பாரிய பின்னடைவை காணுமென்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதே வேளை, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோர்களுக்கிடையே இதுவரைக்கும் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்கள். இதன் முதற்கட்டமாக குறிப்பிட்ட குழு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான மௌலவி ஏ.எல்.எம்.கலீல், மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் ஆகியோர்களை கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மு.காவின் குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது ஹஸன்அலி – பசீர் சேகுதாவூத் தரப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும். கட்சியின் பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பினால் உருவாக்கப்பட்ட கட்சியின் யாப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாதென்றும் கோரிக்கைளை முன் வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இப்பத்தி எழுதும் வரை இவர்களின் இக்கோரிக்கைகளுக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும் தெரிகின்றது.
ஹஸன்அலி – பசீர் சேகுதாவூத் தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிறைவேற்றும் போது அது அவருக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. கட்சியின் பொதுச் செயலாளரின் அதிகாரங்களை குறைத்தமை, அதனை தொடர்ந்து வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக அதிரடியாக இரண்டு உயர்பீட உறுப்பினர்களை இடைநிறுத்தி வைத்தமை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட ரவூப் ஹக்கீம் ஈற்றில் கட்சியின் செயலாளருக்கும், தவிசாளருக்கும் முன் தலை குனிந்து விட்டார் என்ற பெறுமானத்தை ஏற்படுத்தும். இப்பெறுமானம் கட்சியில் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்ற செல்வாக்கை பின்தள்ளவும் செய்யக் கூடும்.
மறு புறத்தில் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது போனால் கட்சியை நடத்திச் செல்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்றபடும். சில வேளைகளில் மு.கா நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டியும் ஏற்படலாம். மேலும், ஹஸன்அலியை பொதுச் செயலாளர் பதவியிருந்து முற்றாக தூக்கி வீசவும் முடியாது. ஏனெனில், கட்சியின் அடுத்த பேராளர் மாநாட்டில்தான் புதிய பொதுச் செயலாளரை நியமனம் செய்ய முடியும்.
அத்தோடு, கட்சியின் செயலாளருக்குரிய அதிகாரங்களில் இழுபறியிருக்கும் போது ஹஸன்அலியை உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு நீக்கினால் கூட பிரச்சினைகள் ஏற்படவும், நீதிமன்றத்திற்கு செல்லவும், கட்சியின் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடைகள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறு பல சிக்கல்களுக்கு மத்தியில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாட்டிக் கொண்டுள்ளார். கடந்த காலங்களில் தனக்கு முன்னால் பூதாகரம் கொண்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட ரவூப் ஹக்கீமுக்கு தற்போதைய பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காண முடியாது.
கட்சியின் செயலாளர் குறித்தான வழக்கொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்கொண்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை அக்கட்சியினால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. இது போன்றதொரு நிலையை மு.காவும் அடைந்து கொள்ளுமாயின் அதன் மக்கள் செல்வாக்கில் சரிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தவிசாளர் பசீர் சேகுதாவூத், பொதுச் செயலாளர் ஹஸன்அலி ஆகியோர்களை முன்னிலைப்படுத்தி ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு செயற்பட்டார். ஆனால், இவர்களை புறக்கணித்து சட்டம் படித்தவர்களின் ஆலோசனைகளின் படி கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டதனால்தான் ரவூப் ஹக்கீம் தலையிடியை சந்தித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், கடந்த காலங்களில் ரவூப் ஹக்கீம் பசீர் சேகுதாவூத், ஹஸன்அலி ஆகியோர்களின் ஆலோசனையை மட்டுமன்றி சட்டதரணிகள் சல்மான், நிஸாம் காரியப்பர் உட்பட்ட கட்சியின் சட்டத்தரணிகள் பலரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும்.
இதே வேளை, பொதுச் செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று போராட்டங்களைச் செய்து கொண்டிருக்கும் ஹஸன்அலியை முதலில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இருக்கின்ற முழுக் காலத்திற்கும் பெற்றுக் கொள்ளுமாறு ஹஸன்அலியிடம் முரண்பாட்டை தீர்க்கும் குழுவினர் கேட்டுக் கொண்டதாகவும், அதனை ஹஸன்அலி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஹஸன்அலிக்கு கொடுத்து கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடுகளை தீர்க்கலாம் என்ற எண்ணத்தில் ஹஸன்அலி மண்ணைப் போட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நான் ஏற்றுக் கொண்டால் கட்சியின் ஆதரவாளர்களும், நாட்டு மக்களும் தன்னை பதவி ஆசை கொண்டவன் என்று கருதுவார்கள் அந்த பழிச் சொல் எனக்கு வேண்டாம். கட்சியின் செயலாளரின் அதிகாரங்கள் சூழ்ச்சி மூலமாக பறிக்கப்பட்டுள்ளது.
அதனை மீள வழங்க வேண்டுமென்று கேட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக என்று தொடங்கிய போராட்டம் செயலாளருக்குரிய அதிகாரங்கள் வழங்க வேண்டுமென்று முடிவு கண்டுள்ளமையால் ஹஸன்அலி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வாராயின் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காகவே கட்சியின் தலைவருடன் முரண்பட்டுள்ளார் என்பதாகிவிடும். ஆதலால், ஹஸன்அலி தனது போராட்டம் எதற்காக என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் சத்திய சோதனையில் உள்ளார். இச்சோதனையில் ஹஸன்அலி அடைந்து கொள்ளும் சித்திதான் கீழ் இறங்கிக் கிடக்கும் அவரின் இமேஜை மேலோங்கச் செய்வதற்கு உதவும்.
ஹஸன்அலி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுக்கும் இன்றைய பின்னணியில் ரவூப் ஹக்கீம் மற்றுமொரு தலையிடியை எதிர்கொள்வார். அதாவது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டு பலரும் கொழும்புக்கு படையுடன் தரிக்கலாம். அவர்களை சமாளிக்கும் வேலையை ரவூப் ஹக்கீம் செய்ய வேண்டியேற்படும்.
ரவூப் ஹக்கீம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும், எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணங்களாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு டம்மி ஆட்களை நியமித்தமை. அவர்களில் ஒருவரை இன்று வரைக்கும் டம்மி என்று காலம் கடத்திக் கொண்டு செல்கின்றமை. நீண்ட கால நோக்கின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு முடிவு காணாது, குறுகிய கால நோக்கில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட்டமை.
பதவிகளின் மேல் மோகம் கொண்டவர்களை தமது ஆலோசகர்களாகக் கொண்டுள்ளமை. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுய அரசியல் இலாபத்திற்காக முடிவுகளை எடுத்துக் கொண்டமை, தேர்தல் வெற்றியை மாத்திரம் கருத்திற் கொண்டு தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமை, கட்சியின் கட்டமைப்பை பாதுகாத்துக் கொள்ளாமை, கட்சியின் பிரதேச அரசியல் தலைவர்களின் பிணக்குகளை தீர்ப்பதற்கு முன் வராமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மூலம்: விடிவெள்ளி