ஏறாவூர் ஏஎம்.றிகாஸ்-
கடந்த காலங்களில் எமது நாட்டில்; பல்வேறு சந்தரப்பங்களில்; ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தங்களின்போது மக்களின் அபிப்பிராயங்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஆனால் தற்போது சகல மட்டங்களிலும் மக்களின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு அவர்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அரசியலமைப்பு அமைய வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவர்கள் மத்தியில் புரிந்துணர்வுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் நூற்றாண்டு காலப்பழைமை வாய்ந்த ஏறாவூர் -அலிகார் தேசிய பாடசாலையில் சுமார் இரண்டு கோடி ரூபா நிதியில் நிருமாணிக்கப்பட்ட கேட்போர்கூடத் திறப்புவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாடசாலையின் நூற்றாண்டு நினைவாக இக்கேட்போர் கூடம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அதிபர் எஸ்ஏ நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்ஐ சேகு அலி, பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா, கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் எம்எல்ஏ லத்தீப்,நகர சபையின் செயலாளர் எம்எச்எம் ஹமீம் மற்றும் முன்னாள் தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் - எமது நாட்டிலே வாழ்கின்ற சகல இன மக்களும் புரிந்துணர்வுடனும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான அர்த்தமுள்ள தீர்வுத்திட்டமொன்றை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றன.
கடந்த காலங்களில் அரசியலமைப்புகள் உருவாக்கப்படும்போது மக்களின் அபிப்பிராயங்கள் கேட்கப்படவில்லை, மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை.
எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டிலே வாழ்கின்ற பல்லின மக்களின் கலாசாரம் பண்பாடு இணைவதன் மூலமே நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டமுடியும் என்றார்.