முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு ஒரு பகிரங்க மடல்..!

லைவரே,
சில காலங்களுக்கு முன்னர் ஒரு மரணித்த அரசியல்வாதி கூறக்கேட்டிருக்கிறேன்.

“அந்தக் கதிரை இருக்கிறதே. ஒரு தடவை அதில் இருந்துவிட்டால்,ஒரு முறை அதன் ருசி பட்டுவிட்டால் என்ன வழிப்பட்டாவது,யாரின் தாலி அறுத்தாவது அதை அடையவே மனம் சொல்லும்”

ஜனநாயக அரசியலின் யதார்த்தமே இதுதான்.அதன் நோக்கமும் இதுதான்.பதவிக்காகத்தான் கொள்கை. கொள்கைக்காகப் பதவி அல்ல.J.R.R.Tolkein எழுதிய Lord of the Rings நாவலில் வரும் மோதிரம் போன்றதுதான் பதவி மோகம்.அதை ஒரு முறை அணிந்துவிட்டால் என்ன செய்தாவது மீண்டும் அணியவே தோன்றும். பதவியும், பெண்ணும், புத்தகமும் பயங்கரப் போதை தலைவரே.

‘’ஒருமித்து வாக்களித்த மக்களுக்கு நல்லாட்சியில் நன்மை கிட்டவில்லை’’ என்று பேராளர் ‘மாநாடு’ என்ற பெயரில் சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் நடத்திய ‘‘பேராளர் கூட்டத்தில்” குறிப்பிட்டது காற்றிலும் காதுகளிலும் கரைந்து மறையவில்லை. ஆனால் மைத்திரியின் மேதினக்கூட்டத்தில் நிற்கிறீர்கள். உங்கள் அடிவருடிகள் எப்படியெல்லாமோ அதற்கு நியாயம் தர முற்படுகிறார்கள்.

ஊர் மக்கள் அத்தனை பேரும் மைத்திரியின் பக்கம் நின்றபோது நீங்கள் மகிந்தவின் பக்கம் நின்றீர்கள். காரணம் மகிந்த வெல்வார் என்று நீங்கள் நம்பினீர்கள். மகிந்த மகுடம் சூடினால் உங்களுக்கு அரியாசனத்திற்கு அருகில் ஒரு அமைச்சர் கதிரை கிடைக்கும் என்று நம்பினீர்கள். முஸ்லீம்களின் நலனும் பாதுகப்பும் உங்கள் கண்முன் தெரியவில்லை. காலமும் விதியும் உங்களுக்கு வேறு விடை வைத்திருந்தது. இன்று மைத்திரி பக்கம் நின்றால்தான் அவர் ஊற்றும் பதவிப்பன்னீரில் கொஞ்சமாவது நனைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். அவரின் மேதினக்கூட்டத்தில் நிற்கிறீர்கள்.

முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையிலும் ஒரு பதவிக்காக மஹிந்தவை ஆதரித்தீர்கள். இன்று மஹிந்தவிடம் பதவி இல்லை என்றவுடன் மானத்தை இழந்து மேதினத்தில் நிற்கிறீர்கள். இதுதான் தலைவரே நீங்கள். இதுதான் உங்கள் உண்மை முகம். உங்களிடம் ஒரு கொள்கையும் இல்லை. ஒரு கோட்பாடும் இல்லை. தூரநோக்கு அரசியல் ஒரு துளியும் இல்லை. பதவி, பட்டம், வாகனம், தோரணம், பாதுகாப்பு, கைதட்டல், மாலை, மரியாதை இதுதான் உங்கள் இலட்சியம்.

இதுதான் உங்கள் வாழ்க்கை. இதை அடைவதற்கு நீங்கள் பிறந்த மண்ணையும், மக்களையும் பகடைக்காயாய்ப் பாவிக்கிறீர்கள். உங்களைப் படைத்த இறைவனையும் ஏமாற்றுகிறீர்கள்.

இது புரிந்துதான் உங்கள் மக்கள் உங்களை விரட்டினார்கள். உங்களுக்குப் பாடம் புகட்டினார்கள். ஆனால் நீங்கள் படிப்பினை பெறவில்லை. அந்தப் பதவிமோகம் உங்களை விட்டுப் போகவுமில்லை. இறந்தகாலங்களின் தவறுகளைத் திருத்தி நல்லதொரு அரசியலுக்கு நீங்கள் தயாராகவில்லை. மீண்டும் அதே முருங்கை மரத்தில் ஏறுகிறீர்கள். நீங்கள் ஏறிக்கொண்டே இருப்பீர்கள். ஏமாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஏனெனில் இதுதான் நீங்கள். இவ்வளவும்தான் நீங்கள்.

ஒரு தேர்தல் வரும். யாரின் காலைப்பிடித்தாவது வெற்றிலையில் வாக்குக்கேட்டு வருவீர்கள். மைத்திரியைப் புகழ்வீர்கள். கட்சிமாறுகிறீரே என்று யாராவது விமர்சித்தால் அன்றும் நான் வெற்றிலைதான். இன்றும் வெற்றிலைதான் என்று வார்த்தை ஜாலம் புரிவீர்கள். மக்களும் மயங்குவார்கள். மக்கள் மூடர்களாக இருக்கும் வரைக்கும் அரசியல்வாதிகள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இதுதான் தலைவரே ஜனநாயக அரசியல். இதுதான் நீங்கள். இதுதான் நிதர்சனம்.

இப்படிக்கு 
ராசி முஹமட் ஜாபீர் 
(Raazi Muhammadh Jaabir முகநூல் வழியில்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -