எம்.ஏ.றமீஸ்-
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.தேவராஜன் நேற்று(30)காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது-62. சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த இவரின் நல்லடக்கம் இன்று(31) மாலை அக்கரைப்பற்று இந்துமயானத்தில் இடம்பெறவுள்ளது.
இவரின் நல்லடக்கத்தின்போது நாட்டின் நாலா பாகங்களிலும் இருந்துபெருந்திரளானோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
தம்பிப்போடி மயில்வாகனம் தம்பியப்பா மனோன்மணி ஆகிய அக்கரைப்பற்று பிரதேசத்தின் முதல் ஆயுர்வேதவைத்திய தம்பதியருக்கு பிறந்த இவர் அக்கரைப்பற்று பிரதேசத்தின் முதல் வைத்தியராவார். 1954 நவம்பர் 24ஆம்திகதி பிறந்த இவர் 1979 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி வைத்தியப்பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.
புத்தளம் மாவட்டத்தின் தாய் சேய் மருத்துவ அதிகாரியாக 1985இல் தனது சேவையினை ஆரம்பித்த இவர் புத்தளம்,சிலாபம், அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று போன்ற பல்வேறு பிரதேசங்களில் தனது சிறந்தசேவையினை இறக்கும் வரை ஆற்றி வந்துள்ளார்.
1998-1999 காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளராக சேவையாற்றி வந்த இவர் 1999 முதல் 2001 வரை மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளராகவும் 2001ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் பணிப்பாளராகவும் சேவையாற்றியதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2012 வரைகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் சேவையாற்றி வந்தார்.
தாய்லாந்து, இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விஷேட நிருவாகத்துறைபயிற்சிகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறைக்கு பல்வேறான சேவைகளைமேற்கொண்டு வந்தார். தனது ஓய்வு நிலையில் கூட இவர் சுகாதாரத் துறையினூடாக இப்பிராந்திய மக்களுக்குசேவையாற்றும் வகையில் அக்கரைப்பற்று நகரில் நவீன் வசதிகள் அடங்கிய தனியார் மருத்துவ மனையினை நிறுவிஅனைத்துவித சுகாதார தேவைகளையும் இப்பிராந்திய மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார்.
வைத்திய அதிகாரி டாக்டர் சிந்ராதேவியின் கணவரான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். விஞ்ஞானம்மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் பட்டக்கல்வியினை இரு புதல்விகளும் மேற்கொண்டுள்ளனர். விஞ்ஞானத்துறையில் பயின்று வரும் இவரின் புதல்வியொருவர் தற்போது அமெரிக்காவில் கலாநிதி பட்டப்படிப்பைமேற்கொண்டு வருகின்றார். பொறியியல் துறையில் இவரது புதல்வர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதுகுறிப்பிடத்தக்கது.