சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை.. ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரகடனம் -ஹரீஸ்






எம்.வை.அமீர், எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, அவர்களை அவர்களே ஆளக்கூடிய உள்ளுராட்சிசபை கோரிக்கையை பெற்றுக்கொடுப்பதற்கான சகலவிதமான முன்னெடுப்புக்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது என்றும், குறித்த கோரிக்கையை துரிதப்படுத்த சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக, பிரேரணை ஒன்றை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான, எச்.எம்.எம்.ஹரீஸ் முன்வைப்பதாகவும் தெரிவித்தார். குறித்த பிரேரணையை கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் வழிமொழிந்தார்.

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுகூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2016-05-13 ஆம் திகதி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சராலேயே மேற்படி தீர்மானம் கொண்டுவரப்பட்டு, பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு குழுவின் ஊடாக அனுப்புவதற்கு பிரதேச செயலாளருக்கு பணிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர், இங்கு சிலர் கௌரவ அந்தஸ்த்தில் இருக்கும் பிரதமரை சம்மந்தப்படுத்தி தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்துவதற்கு, சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை கொச்சைப்படுத்த முனைவதாகவும் இவ்வாறான போக்கு நல்லதல்ல என்றும், பிரதமரின் கௌரவத்தை பாதிக்கும் விடயங்களை வெளியிடும் நபர்கள் தொடர்பில் பிரதமரிடம் முறையிடப்போவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமின் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ள, கல்முனை நகர அபிவிருத்தியின் ஊடாக சாய்ந்தமருது உள்ளிட்ட கல்முனைப்பிராந்தியம் பாரிய அபிவிருத்திகளை காணவுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர், வோலிவோரியன் கிராமத்தின் விஸ்தரிப்புக்கு காணிகளை நிரப்புவதற்கான ஒப்பந்தம் இலங்கை காணிமீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனோடு இணைந்த வகையில் தோணாவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் குறிப்பாக வைத்தியசாலை, மீன்பிடி, கல்வி விசேடமாக அல் ஹிலால் வித்தியாலயம் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினுள் உள்வாங்கப்படாமை போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

ஏ.ஏ.பஷீர் மற்றும் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கல்முனை போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை மாநகர ஆணையாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்களும் பள்ளிவாசல் பிரதிநிதி மற்றும் பாடசாலை அதிபர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -