அமைச்சர் மனோ கணேசன்-
2000 மில்லியன் ரூபா முதலீட்டில் மத்திய அரசாங்கம் வடமாகாணத்துக்கு வழங்க தயாராக உள்ள பொருளாதாரா மையம் அமைப்பதற்கு பொருத்தமான காணியை இவ்வார இறுதிக்குள் அடையாளம் கண்டு தருகிறேன் என வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
எனது வட மாகாண விஜயத்தின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய அடிப்படையை ஏற்படுத்த முடிந்துள்ளமையையிட்டு மகிழ்கிறேன். தென்னிலங்கையில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான பொருளாதார மையங்களுக்கு சமானமாக ஒரு பொருளாதார மையத்தை வட மாகாணத்துக்கு என வவுனியாவில் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கு 2000மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பொருளாதார மையம் அமைக்கப்படுமானால், யாழ்,வவுனியா, முல்லை, கிளி, மன்னார் மாவட்ட வடமாகாண விவசாயிகள், கமக்காரர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் உள்ளிட்ட அனைவருக்கும் தங்கள் விளைபொருட்களை விற்றுக்கொள்வதற்கு பெரும் வாய்ப்பு கிடைக்கும். இது வடமாகாணத்துக்கு வழங்கப்படும் பெரும் வரப்பிரசாதம் ஆகும்.
ஆனால், இந்த இடம் அமைக்கப்படுவதற்கு பொருத்தமான இடத்தை வழங்குவதில் வடமாகாணசபைக்கும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் இடையில் ஒரு இழுபறி இருந்தது. இதுபற்றி எனது வடமாகாண விஜயத்தின் போது வவுனியா வாழ் மக்கள் பிரதிநிதிகள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். உடனடியாக இதுபற்றி நான் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனது நண்பர் பி.ஹரிசனுடன் உரையாடினேன்.
இதையடுத்து வடமாகாண முதல்வர் சீ. வி. விக்னேஸ்வரனை சந்தித்தேன். உரிய காலத்துக்குள் இந்த இடம் வழங்கப்படாவிட்டால், குறிப்பிட்ட 2000 மில்லியன் ரூபா தொகை வேறு தென்னிலங்கை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படலாம் என்ற அபாயம் பற்றியும் நாம் இருவரும் கலந்து பேசினோம்.
இந்நிலையில் இதை தீர்த்து பொருத்தமான ஒரு இடத்தை வவுனியா நகருக்கு அண்மித்த ஒரு இடத்தில் தெரிவு செய்து வழங்க முதல்வர் விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இன்னமும் இரண்டொரு தினங்களில் இந்த இடத்தை அறிவிப்பதாகவும் அவர் என்னிடம் கூறியுள்ளார்.