நமது வாழ்வே ஒரு நாடகம் தான். நாம் நாடகம் தான் ஆடிக்கொண்டிருக்கின்றோம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவை வெவ்வேறான நாடகங்கள்” என யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் தெரிவித்தார்.
செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' என்ற நூல் புதன்கிழமை (11) மாலை 4 மணிக்கு நல்லூர் நாவலர் கலாச்சார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“ஒருவரை பிடிக்கிறதோ இல்லையோ சாலையில் பார்த்தால் மரியாதையுடன் ஐயா வணக்கம் அம்மா வணக்கம் என்று கூறி கொஞ்ச தூரம் சென்றவுடன் இவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லவேண்டியிருக்கே என்று நினைக்கத் தோன்றும். இவை எல்லாம் நாடகங்கள் தான். எல்லா நேரங்களிலும் எல்லோரிடமும் நாடகங்களை ஆடிக்கொண்டிருக்கின்றோம்.
நான் பாடசாலையில் படிக்கும்போது இரசாயனவியல் பாடம் நன்றாக வராது. எனக்கு இரசாயனவியல் ஆசிரியரைப் பார்த்தாலே இவருக்கும் வணக்கம் சொல்ல வேண்டியிருக்கே என்ற நினைப்பு வரும். அவர் என்னைப் பார்க்கும்போதேல்லாம் நல்ல மார்க் வாங்கவேண்டும் என்று வலியுறுத்துவார். இதனால் அவரைத் தூரத்தில் பார்த்தாலே அச்சம் மட்டுமல்ல வணக்கம் வேற சொல்லவேண்டுமே என்ற நிலை இருந்தது.
அவருக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. பின்பு வாத்தியாருக்கும் வணக்கம் சொல்லி இரசாயவியல் பாடத்தையும் படிப்படியாகப் படிக்கத்தொடங்கினேன். எல்லா வாத்தியாரையும் விட இரசாயவியல் ஆசிரியரை வீழ்ந்து வணங்கி வணக்கம் சொல்லி பாடத்தைப் படித்து இறுதியில் இரசாயவியல் பாடத்திலும் கூடிய புள்ளி பெற்றேன். இரசாயவியல் ஆசிரியருக்கு போலியாக வணக்கம் சொல்லி நாடகமாடி அவ் நாடகமே ஒருகட்டத்தில் என்னை உயர்நிலைக்கு கொண்டுவந்தது. இரசாயவியல் ஆசிரியரும் நான் நாடமாடுகிறேன் என்று தெரிந்துகொண்டும் என்னை உயர்நிலைக்கு கொண்டுவந்தார்.
இப்போது கூட எனக்குக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அக்குழந்தைகள் எனக்கு தொலைபேசியில் அப்பா எப்படி சுகமாக இருக்கின்றீர்களா? எனக் கேட்டால் கூட எனக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் கூட நான் நன்றாக இருக்கின்றேன் என்று கூறுவேன்.
இதுகூட ஒருவகை நாடகம் தான். வாழ்க்கை பூராகவும் நாடகம் அடங்கியதாக அமைந்து விடுகின்றது. நாடகங்கள் அரங்கேற்றும் போது மாற்றுத்திறனாளிகளை வைத்து கேலிக் கூத்துகளை நிகழ்த்துவதுண்டு. அதுமாதிரியான கேலிச்சித்திரங்களையும் நாடகங்களையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.