சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக, அதிகார சபை மேலும் கூறியுள்ளது.
சீமெந்து விலையை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து அத தெரண வினவியபோதே, அந்த அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
டொலருக்கான விலை அதிகரித்தமை மற்றும் வெட் வரி நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்களால் சீமெந்து விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தின் கீழ் அத்தியவசியப் பொருளாக பெயரிடப்பட்டுள்ள சீமெந்துக்கு 870 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.