நேற்றைய தினம் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தோல்வி கண்டமைக்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்காக மேலதிக நிதியனை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்திற்கு குறைவான வாக்குகளே கிடைத்திருந்தன.
இந்நிலையில் அரசாங்கம் பாரிய சவாலை எதிர் நோக்கியிருந்த அதேவேளை, அரசாங்கம் நூலிழையில் தப்பியது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அரசாங்கத்திற்கு குறைவான வாக்குகளே கிடைத்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் தாயாரின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் பத்தினி திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் அரசாங்கத் தரப்பின் பெரும்பாலானோர் கலந்துகொண்டதாகவும், இதன் காரணமாகவே அரசாங்கத்திற்கு குறைவான வாக்குகள் கிடைக்கப்பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
முன்னதாக, குறித்த பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
எனினும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியதையடுத்து, மீள் வாக்கு எண்ணப்பட்டது.
இதில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலா 31 வாக்குகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு சமநிலையில் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.