றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட, நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவுக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகநபருக்கு பிணை வழங்கப்படின் அது அந்த விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என, அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை தாஜூடீனின் கொலை தொடர்பிலான ஆரம்ப பிரேதப் பரிசோதனை அறிக்கை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வைத்திய சபை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளது.
குறித்த விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு இதன்போது உத்தரவிட்ட நீதவான், குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.