முகநூல் (Face Book) பாவனையும் சமூக, இஸ்லாமிய நோக்கும்..!

எம்.எல்.பைசால் (காஷிபி)-
2004 ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவன் மார்க் ஜுக்கர்பெர்க் அவர்களால் தனது நண்பர்களிடையே கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக பரீட்சார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட முகநூல் இன்று உலகில் மக்களின் அன்றாட வாழ்கையினை விட்டும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் அவரது நண்பர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் என இதில் இணைந்து கொண்டிருந்தனர். பின்னர் இதன் தேவை உணரப்பட்டு அங்கத்துவம் விஸ்தரிக்கப்பட்டது. 2014 ம் ஆண்டின் கணிப்பீட்டின் பிரகாரம் நாளொன்றுக்கு 1.04 bபில்லியன் மக்கள் பார்வையிடுவதாகவும்,வருடம் ஒன்றிற்கு 1.390 மில்லியன் பாவனையாளர்கள் அங்கத்துவம் பெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகிலுள்ள மக்கள் தொகையில் ஏழு நபர்களில் ஒருவர் இதில் பயன் பெறுவதாகவும்,நூறு கோடி மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்தமையினையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாவும் இதன் ஸ்தாபகர் கருத்துத் தெரிவித்து தனது சந்தோசத்தினை வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டலாம்.

முகநூல் ஆனது “டுவிட்டர்”,”வட்சப்”,”வைபர்” போன்ற பல சமூக வலைத் தளங்களை பின் தள்ளி கடந்த 12 ஆண்டு காலமாக தனக்கு நிகர் தானே என்ற அடிப்படையில் முதன் நிலை வலையமைப்பாக சமூகத்தில் வலம் வருவதை அவதானிக்க முடியும்.

சமூகத்தில் இளசுகளை வெகுவாகக் கவர்ந்திரு்கும் இத்தளம் அரசியல்த் தலைவர்கள்,மார்க்க அறிஞர்கள், ஆசிரியர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என பல தரப்பாரின் அங்கத் துவத்தினை பெற்றுள்ளமையும், சமூக நிறுவனங்கள், சமயத் தலங்கள், சமூக, சமய அமைப்புக்கள், பாடசாலைகள், சங்கங்கள்,பத்திரிகைகள், இணைய செய்தித் தளங்கள் என நிறுவன ரீதியாகவும் இதில் இணைந்துள்ளமையும் அதற்கான சமூக அங்கீகாரமாகப் பார்க்கப் படுகின்றது. 

ஒரு செய்தியை குறுகிய நேரத்திற்குள் தனது நண்பர்களுக்கு பொதுவாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ தெரியப் படுத்துவதற்கும், பலரது தொடர்புகளை பெற்றுக் கொள்வதற்கும் தனது உள்ளத்தில் நிறைந்துள்ள கருத்துக்களை தான் விரும்பும் மொழிகளில் பரிமாறிக் கொள்வதற்கும் சிறந்த ஊடகமாக இத்தளம் உள்ளது.

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் வாழும் ஒருவர் தனது கிராமத்து மக்களுடன் மக்களாக இருந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை இது ஏற்படுத்திக் கொடுப்பதுடன், தொலைந்த உறவுகளை பெற்றுக் கொள்ளல், மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி குறிப்பிட்ட கருத்தின் பால் ஒன்றிணைத்தல்,தனது நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளை காட்சிப் படுத்துதல் போன்ற பல விடயங்களுக்காகவும் இது உபயோகத்திலுள்ளதையும் பார்க்கின்றோம். 

தேர்தல் காலங்களில் இதன் மூலமான கருத்துக்கள் மிகுந்த தாக்கத்தை செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி,ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களிடையே நேருக்கு நேர் கருத்தரங்கினை நடாத்தி அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியமை, 2011 எகிப்தில் ஏற்பட்ட புரட்சி,2015 ஜனவரி 8 ல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போன்ற அரசியல் வரலாற்று நிகழ்வுகளை உதாரணமாகக் கூறலாம. 

இதனால்த்தான் அரசியல்வாதிகள் தமது முகநூல் ஊடான செயற்பாடுகளுக்கு ஒருவரை நியமித்து தமது கருத்துக்களையும்,செயற்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதையும், பதிவேற்றம் செய்வதையும் தினமும் அறிகின்றோம். 

இவ்வாறு பல நன்மைகளை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிந்தாலும் சமூகத்தின் ஒழுக்க வீழ்ச்சியில் பெரும் தாக்கம் செலுத்துவதை மறுப்பதற்கில்லை. 

சமூக சீரழிவிற்கு இத்தளம் காரணமாய் உள்ளதை காரணமாகக் கருத்திற் கொண்டு சீனா,ஈராக்,பங்களாதேஷ் போன்ற நாடுகள் இதனை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டியதையும்,13 வயதுக்கு மேற்பட்டோர் முகநூல் கணக்கினை திறக்க முடியும் என அதன் நிருவாகம் அறிவித்த போதிலும் இந்தியா போன்ற நாடுகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே முகநூலினை பயன்படுத்த அனுமதித்துள்ளமையினையும் எடுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

முகநூலானது சமூகத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் என்ன என்பதை விழிப்பூட்டுவதற்காக சில செயற்பாடுகளை எடுத்துக் கூறுவதோடு அவை சமூகச் சீரழிவிற்கு எவ்வாறு காரணமாய் உள்ளதென்பதையும் நோக்குவோம். 

அரசியல்,அபிவிருத்தி,உரிமை என்ற பெயரில் படித்தவவர்கள்,பாமரர்கள், மாணவர்கள் முதல் ஓதிப் படித்த ஆலிம்கள் வரை பிரதேசவாத, குரோத, மானத்துடன் சம்பந்தப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்து சமூகத்திலுள்ள தலைவர்களை மிகக் கேவலமாக சித்தரித்துக் காட்டும் செயற்பாட்டினை ஊக்குவித்து, சமூகத்தில் மூத்தவர்களை மதியாத தன்மையும், மடமைக்கால வசைபாடும் படலமும் வளர்ந்துவர காரணமாய் உள்ளது.

சிலர் தங்களது அன்றாட செயற்பாடுகளை மற்றவர்களுக்கு காட்சிப்படுத்தி “லைக்”, ”கொமான்ஸ்” களைப் பெறுவதற்காக வரம்புமீறி இதனைப் பயன்படுத்துகின்றனர். திருமண மணவறையில் மணமகனும், மணமகளும் ஒன்றாக எடுத்த புகைப் படங்களையும், அன்னையர் தினம் என்ற பெயரில் தனது தாயின் புகைப்படங்களையும், மற்றும் பெண்களின் புகைப்படங்களையும், சமூகத் தலைவர்களை மிருகங்களாக அல்லது ஏனைய சமய தெய்வங்களாக சித்தரித்த படங்களையும் காட்சிப்படுத்துதல் சர்வசாதரணமாகிவிட்டது.  

இதனால் சிலரது குடும்ப வாழ்கையில் விரிசல்கள் ஏற்பட்டிரிக்கின்றன. “லைக்”, ”கொமான்ஸ்”  பெறப் பயன்படுத்திய வழி மிகக் கேவலமானதாகும்.

ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் சமூகச் சீரழிவுகள் இடம் பெறுகின்றன. அண்மைக் காலங்களில் முகநூல் மூலமான காதல் விவகாரங்களினால் தற்கொலைகளும், பாலியல் வல்லுறவுகளும் இடம் பெற்று வருவதை சுட்டிக் காட்டலாம்.

நிகழ்ச்சிகளில் அல்லது செயற்பாடுகளில் பங்குபற்றி விட்டு அதன் போது பிடித்த புகைப் படங்களை பதிவேற்றம் செய்யும் வழக்கம் அதிகரித்தி ருக்கின்றது.அவ்வாறு செய்யும் போது அதனால் ஏற்படும் சமூக விளைவினை உரியவர்கள் கவனத்திற் கொள்வதில்லை.

ஆற்றில் நீராடச் செல்பவர்கள் தங்களது திறந்த உடலை காட்சிப்படுத்துவதும், பாடசாலைகளில் வயதுக்கு வந்த மாணவிகளின் சுற்றுலா, கௌரவிப்பு போன்ற சந்தர்ப்பங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,விழாக்களின் போது தனது தாயுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என பதிவேற்றி பிழையான கலாசாரத்தினை இந்த முகநூல் பாவனையாளர்கள் அறிமுகப் படுத்துகின்றனர்.

சமூகப் பிரமுகர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி அவருக் “லைக்” போடுங்கள் எனக்கூறி அவருக்கு மற்றவர்களிடமிருந்து வசைப்பாடல்களை பெற்றுக் கொடுக்கும் அசிங்கமும்,அவரது சேவையினை நினைவு கூரல் என்ற பெயரில் முகஸ்துதி பாடும் கைங்கரியமும் பரவலாக அரங்கேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. 

வணக்க வழிபாடுகள் இறைவனுக்கும், குறிப்பிட்ட மனிதனுக்குமிடையிலுள்ள தொடர்பாகும். இன்று சமூகத்தில் உம்றா போன்ற கடமையினை நிறைவேற்றி விட்டு ஏன்தான் விளம்பரப் படுத்துகிறார்களோ தெரியவில்லை.

பணத்தினை செலவு செய்து சிரமப்பட்டு நிறைவேற்றிய வணக்கம் மற்றவர்கள் மூலம் தனக்கு “கொமன்ஸ்”, “லைக்” கிடைக்க வேண்டும் என உரியவர் நினைத்து விட்டால் இந்த உம்றாவின் நிலைமை என்ன? 

இஸ்லாம் பிறந்த தினத்தினைக் கொண்டாடுவதை ஊக்கப்படுத்தும் மார்க்கம் அல்ல. இருப்பினும் முகநூல் பாவனையாளர்கள் தமது பிள்ளைகளின் பிறந்த தினத்தினை காட்சிப்படுத்தி வாழ்த்துக்களைப் பெற எத்தனிப்பதை பலர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

அந்நிய கலாசாரத்தினை மற்றவர்களின் பாராட்டிற்காக திணித்து இஸ்லாம் காட்டிய நல்ல கலாசாரங்களை மறக்கடித்து சமூகம் மறந்து போயுள்ள இச்செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கான கூலி இறைவனிடம் நிச்சயம் உண்டு என்பதை உரியவர்கள் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

சமூகத்தினை சீர்திருத்தம் செய்தல் என்ற போர்வையில் போலிப் பெயர்களில் முகநூல் கணக்குகளைத் திறந்து சமூக நிறுவனங்களுக்கும் ,தனிமனிதர்களுக்கும் அபாண்டங்களை சுமத்தும் மானங்கெட்ட,ஒழுக்கமற்ற செயற்பாடுகளை சிலர் முன்னெடுக்கின்றனர். முன்பு ஒரு காலத்தில் அநாம தேய துண்டுப் பிரசுரங்கள் மூலம் நடாத்தப்பட்ட இவ்வேலை இன்று குறைந்த செலவில் இலாபகரமாக முன்னெடுக்கப் படுகின்றது.

சமூகத்தினை அமைதி இழக்கச் செய்தமையினையும், சில நல்ல செயற்பாடுகளை முடக்கிவிட்டதையும் தவிர வேறு எதனையும் இவர்கள் சாதிக்கவில்லை. சிலர் அசிங்கமான படங்களையும்,காட்சிகளையும் தரவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்கின்றனர். அதன் தாக்கம் அவர் மரணித்த பின்பும் சமூகத்தில் உலாவித் திரியும் என்பதை உரியவர்கள் மறந்து செயற்பட முடியாது. 

பாடசாலை மாணவர்களில் அநேகர் முகநூலில் தான் தனது நேரங்களை அதிகமாச் செலவிடுவதைக் காண்கின்றோம். அதன் போது மாணவனும், ஆசிரியனும் தங்களுக்குள் “கொமன்ஸ்” களை இடுகின்றனர். அவர்களது சில “கொமன்ஸ்கள்” பாடசாலை கட்டிக் காத்துவரும் நல்ல கலாசரத்தினை புதைத்து சமூகத்தில் ஆசிரியர்,மாணவர் உறவினை அசிங்கப்படுத்தியுள்ளது. 

இஸ்லாம் சிறந்த ஒழுக்க,பண்பாட்டு கருத்துக்களால் நிறைந்த மார்க்கம். இதன் உபதேசங்கள் சகல இன மக்களுக்கும் பொருத்தமானதாகும். இஸ்லாத்தின் பெயர் தாங்கி இம்முக நூலில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் மிக பக்குவமாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.

"ஈமான் கொண்டதற்குப் பிறகு பட்டப்பெயர் சொல்லி அழைப்பது பாவமாகும்", "ஈமான் கொண்டவர்களே ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தினை கேலி செய்ய வேண்டாம்" “முஃமின்கள் சகோதரர்களாகும் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துங்கள்”, “நீங்கள் மற்றவர்களின் குறைகளை ஆராயவேண்டாம்” (ஹுஜ்றாத்).

“எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடன விஷயங்கள் பரவவேண்டுமெனப் பிரியப்படுகின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும்,மறுமையிலும் நோவினை செய்யும் தண்டனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் அறிகின்றான்.நீங்கள் அறிய மாட்டீர்கள்” (24:19) ஆகிய அல் குர்ஆன் வசனங்கள் படிப்பினையாக அமையட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -