கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரால் அவகௌரவப் படுத்தப்பட்ட விடயமானது கண்டிக்கப்பட வேண்டியது. இது முழு நாட்டு முஸ்லிம்களையும் அவமானப்படுத்தப்பட்டமைக்குச் சமனானது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.
நேற்று (28) இரவு கிண்ணியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவில் அதீதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தொரிவிக்கையில்;
நாட்டில் இருக்கின்ற ஒன்பது மாகாணங்களிலும் முஸ்லிம் முதலமைச்சரைக் கொண்ட ஒரெயொரு மாகாணம் கிழக்காகும். இந்த வகையில் ஒரு மாகாண முதலமைச்சருக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையும் அந்தஸ்த்தும் கொடுக்கப்பட வேண்டும்.
யுத்தம் முடிவடைந்ததும் பின்பும் படையினர் தங்களுடைய அதிகாரத்தை நிலை நாட்ட முற்படுவது முதலமைச்சர் தரக்குறைவாக நடாத்தப்பட்டதன் மூலம் தெளிவாகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் சிவில் வைபவங்களில் ஏன் படையினர் கலந்து கொள்ள வேண்டும். ஏனைய மாகாணங்களில் இந்த முறைமை இல்லைதானே.
சிவில் நிர்வாகம் இங்கு எல்லாத் துறைகளிலும் நடாத்தப்பட வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியைக் காண முடியும். கிழக்கு முதலமைச்சர் படையினர் முகாமுக்கு செல்ல முடியாது என்ற வரையறையை படையினர் எவரும் எடுக்க முடியாது. ஏனெனில் அவர் சனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி. இதற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் கிண்ணியா பிரதேசம் பாராளமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் இன்று வரை பெற்று வந்தாலும் ஏனைய மாவட்டகளோடு ஒப்பீட்டு பார்க்கும் போது அனைத்துத் துறைகளிலும் பின்னோக்கியே காணப்படுகின்றது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அந்த வகையில் சவூதி அரசாங்கத்தின் நிதி உதவியோடு கண்டல்காடு, தீனேரி போன்ற வயல் நிலங்களுக்கு மகாவெலி நீரைக் கொண்டு வரும் பாரிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறேன். இது நிறைவேறுகின்ற போது ஏனைய துறைகளும் தானாக அபவிருத்தி அடையும் நிலையேற்படும் எனத் தெரிவித்தார்.