காரைதீவு நிருபர் சகா-
சம்மாந்துறை மக்களின் மற்றுமொரு உயர்ந்த மனிதாபிமான செயற்பாட்டின் வெளிப்பாடாக அண்மையில் நாட்டிலேற்பட்ட சீரற்ற காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 27லட்சத்து 77ஆயிரத்து 800ருபாவை வழங்கியுள்ளனர்.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர் இதனைச் சேகரித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பின் தலைவர் அல்ஹாஜ்.யூசுப் முப்தியிடம் கையளித்தனர்.
நம்பிக்கையாளர்சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா செயலாளர் எம்.எம்.சலீம் பொருளாளர் எம்.ரி.றாசிக் மற்றும் றம்சீன் காரியப்பர் உள்ளிட்ட சபையினர் அதனை கொழும்பு சென்று கையளித்தனர் இந் நிகழ்வில் தலைவர் முஸ்தபா தெரிவிக்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கும் எமது நிவாரணம் சென்றடையவேண்டும். இதுவே எமது அவா எனக்கூறினார்.
இதுபோன்று கடந்த 2004 இல் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமி அனர்த்தத்தின்போது கல்முனைக்கரையோர தமிழ் முஸ்லிம் மக்களில் ஆயிரக்கணக்கானோர் மறுகணம் தஞ்சமடைந்தது சம்மாந்துறையிலே. இன மத பேதம் பாராமல் அனைவருக்கும் உணவு உடை உறையுள் வழங்கி அன்புகாட்டி ஆதரவு வழங்கி பல நாட்கள் பராமரித்ததும் இதே சம்மாந்துறை மக்களே. அது மனிதாபிமானத்தின் உச்சகட்ட செயற்பாடாக அன்று கருதப்பட்டது.
அந்த வரிசையில் இன்று பிராந்தியம் தாண்டி இப்பேருதவியைச்செய்திருக்கிறார்கள் சம்மாந்துறை மக்கள்.
மாவடிப்பள்ளி ஜூம்மாவிற்கு 20லட்சருபா நிதியுதவி!
இதேவேளை காரைதீவுப்பிரதேசத்திலுள்ள மாவடிப்பள்ளி ஜூம்மாப் பள்ளிவாசல் நிருவாக சபையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர் 20லட்ச ரூபாவை வழங்கினர்.
மாவடிப்பள்ளி ஜூம்மாப் பள்ளிவாசல் நிருமாணத்திற்கு உதவியாக இத்தொகை வழங்கப்பட்டது.
இதில் விசேசம் என்னவென்றால் இத்தொகை ஒரேயொரு நாளில் மக்களிடையே சேகரித்த நிதி என்பதுதான்.
இதற்காக பேருள்ளம்கொண்ட மக்களுக்கு நம்பிக்கையாளர்சபைத்தலைவர் கே.எம்.முஸ்தபா (முன்னாள் அதிபர்) நன்றிகளை இதயபூர்வமாகத் தெரிவித்தார்.