மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நான்கு பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் 27.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இதற்கமைய, மட்டக்களப்பு பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயம், காராயகன்தீவு மகா வித்தியாலயம், காத்தான்குடி மில்லத் மகா வித்தியாலயம், மட்டு,பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளுக்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பாடசாலைகளில் நிழவி வரும் இடவசதிப் பிரச்சினைகள் தொடர்பில் புனரவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தனது அமைச்சின் கீழ் இத்திட்டத்துக்கான நிதியினை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாடசாலைகளில் குறைபாடுகள் நிழவுகின்றன. அவற்றினை நிவர்த்தி செய்து வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படடுள்ள நான்கு பாடசாலைகளுக்குமான புனரமைப்பு – நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் - என்றார்.