மட்டக்களப்பு விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்கான அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மட்டக்களப்பு விமான நிலையத்தில் வர்த்தக ரீதியிலான பயணிகள் சேவைகளுக்குரிய தொழிற்பாடுகளை ஆரம்பிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய விமான நிலைய முனையக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு மற்றும் விமான ஓடுபாதை, நடையோடுபாதை மற்றும் ஏற்றிடத்தை புனரமைப்பதற்கு என அமைச்சரவையின் மூலம் 2015 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் இதுவரை அவ்வேலைத்திடத்தில் 80 வீதமான வேலைகள் நிறைவுபெற்றுள்ளன.
எஞ்சிய பகுதியை சிவில் விமான சேவை அதிகார சபையின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.