சுலைமான் றாபி-
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நஞ்சு உற்பத்திகளை தடை செய்வதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் விஷேட குழுவொன்று நியமிக்கப் பட்டுள்ளதாக தேசிய உணவு உற்பத்திப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எம்.எம். அலியார் நேற்றையதினம் (11) நிந்தவூர் அமானா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினரால் "நஞ்சற்ற உணவு உற்பத்தியும், போசனை" சம்பந்தமானதுமான விழிப்புணர்வும், இப்தார் நிகழ்விழும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் :
எமது நாட்டிலுள்ள மக்கள் ஆரோக்கியமான சமுதாயமாக வாழவேண்டுமென்றால் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்தல் மட்டுமல்லாமல் அதனை நுகரவும் கூடாது. அண்மையில் BMICH இல் "நச்சு விஷமற்ற ஒரு நாடு" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி தலைமையில் கண்காட்சியொன்று நடைபெற்றது.
இதில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நாட்டில் விவசாய ரசாயனப் பசளைகளை முற்றாக ஒழித்து அதனூடாக இயற்கைப் பசளைகளைப் பாவித்து நஞ்சற்ற உணவு உற்பத்திகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த கண்காட்சி இடம்பெற்றது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நஞ்சு உற்பத்திகளை தடை செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தினால் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக இம்மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப் படும் விவசாயத்திட்டத்தின் மூலமாக எதிர்காலத்தில் நஞ்சற்ற உற்பத்திப் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதற்கும் அதேபோன்று அப்பொருட்களை நுகர்வு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதே போன்று இம்மாவட்டங்களில் எதிர்வரும் பெரும் போக விவசாய பயிர்ச் செய்கைகளில் சுமார் இரண்டு இலட்சம் ஏக்கர் காணிகளில் பாரம்பெரிய முறைப்படி விவசாயப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இனிவரும் காலங்களின் வேளாண்மை அறுவடைகளின் பின்னர் வைக்கோல்களை எரிக்கும் காணிச் சொந்தக் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படுவதோடு, அவர்களுக்கு 5,000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்படவுள்ளது.
இதேவேளை அண்மையில் பசளை மானியம் வழங்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் அரசினால் வழங்கப்பட்ட அந்த மானியமானது பசளை மானியம் அல்ல. மாறாக அது விவசாய மானியமாகும். இதன் முக்கியமான நோக்கம் எதிர்வரும் மூன்று வருடத்திற்குள் சேதனைப் பசளைகளின் பாவனைகளை தவிர்த்து இயற்கைப் பசளைகளின் பாவனைக்கு மாறவேண்டும் என்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கையாவே ஏக்கருக்கு தலா 5,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று யூரியா பசளையினை பாவிக்கும் போது அதில் 40% வீதமானதை பயிரிடப்பட்டுள்ள பயிர் அகத்துறிஞ்சும் அதேவேளை 20% ஆவியாகி மீதமாகவுள்ள 40 % நிலத்தடி நீரில் கலக்கின்றது. இதன் மூலமே நீர் உப்புக்களாக மாறி அதிகமாக சிறுநீரக நோய்கள் ஏற்பட காரணமாகின்றன. எனவே இவ்வாறான பசளைகள் மூலம் அதன் பின் விளைவுகளை கண்டு கொள்ளாத ஏராளமான விவசாயிகள் தமது விவசாயத் தொழிலில் இவ்வாறான சேதனைப் பசளைகளை பாவிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இங்கினியாகல நீர்த்தாங்கியானது அதில் சுத்திகரிக்கப்படும் பதார்த்தங்களின் நச்சு ஊற்றுக்கள் அனைத்தும் கடலை நோக்கி வருவதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழ்பவர்கள் கிணற்று நீரை அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.
எனவே எல்லாவற்றிக்கும் அத்திவாரமான நஞ்சில்லாத போஷாக்கினைப் பெற்று அறிவுள்ளதும், ஆற்றலுள்ளதுமான சமூகம் ஒன்றினை உருவாக்க அனைவரும் நஞ்சில்லாத உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.