இனங்களுக்கிடையே வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களுக்கு எதிரான தடைச்சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் இது குறித்த தனி நபர் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு தான் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வாரம் மஹியங்கனையில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் விதத்திலான வெறுப்புக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கதாகும்.
ஏற்கனவே இவர் அளுத்கம பகுதியில் இனவாத பேச்சு பேசியதன் விளைவை நாடு கண்டுகொண்டது. தற்போது அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்தும் விதத்தில் அவர் மீண்டும் வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தாமதிக்காது வெறுப்புப்பேச்சுக்களை கட்டுப்படுத்தும் சட்டமொன்றை இயற்றும் அவசரத் தேவை எழுந்துள்ளது என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இனவாதிகளுக்கு களமமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் நாட்டில் இனக்குரோதம் வளர்க்கப்பட்டு அதன் எதிரொலியாக நாட்டில் பாரிய விபரீதங்கள் ஏற்பட்டன.
2015 ஜனவரியில் நாட்டு பற்றுள்ள மக்கள் இனவாதத்தை தோற்கடித்தனர். அத்துடன் இனவாதிகளின் கொட்டம் அடங்கிவிடும் என மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இருந்தபோதிலும் முன்னர் இருந்தது போன்று பொதுபல சேனாவிற்கு அரசின் ஆசீர்வாதம் இல்லை. அவர்களால் தற்போது எதனையும் செய்துவிட முடியாது. இப்போது அவர்களது கூட்டங்களை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். அவர்களால் மீண்டெழ முடியாது.
இருப்பினும் அவர் ஏனைய மதங்களை குறிவைத்து இனவாத கருத்துக்கள் மூலம் வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து வருகின்றார். இதனால் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் அச்சமடைகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் பாராளுமன்ற தேர்தலின்போதும் இனவாத பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் தடுப்பதற்கு சட்டம் கொண்டு வருவோம் என நாம் வாக்குறுதியளித்தோம். அதனை நிறைவேற்றவேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் தாமதிக்காது நாம் இவ்வறானதொரு சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
விரைவில் இனவாத பேச்சுக்களை கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.
அத்துடன், அடுத்தவாரம் பாராளுமன்ற கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஞானசார தேரரின் உரை மற்றும் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளேன்.
இதேவேளை, ஏற்கனவே அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சிக்குழு கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு அழுத்தமாக கூறியிருக்கிறேன் என்றார்.