ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் -
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை-
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் மீது நான், ஆங்கிலத்தில் உரையாற்ற இருந்தேன். ஆனால், இங்கு சிங்களத்தில் தெரிவிக்கப்பட்ட சில சுவாரஷ்யமான கருத்தக்களை செவிமடுத்த பின்னர், சிங்களத்திலும் உரையாற்றுவதற்கு எண்ணுகின்றேன்.
உண்மையில், இந்தசபையில் ஒருபழக்கம் இருக்கின்றது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை பின்னோக்கி பார்க்கும்போது பொதுவாக, எதிர்கட்சியினர் தேர்ந்தெடுப்பது என்னவென்றால், அந்த நம்பிக்கையில்லா பிரேரணை பற்றிய காரணம் சம்பந்தமாக அல்லாது, முக்கியமாக இலக்குவைப்பது அரசாங்கத்தை வீழ்த்துவதையேயாகும். அரசிலுள்ள ஜாம்பவான்களை அதற்காக குறிவைப்பதாகவுமே என்றே எனக்கு தோன்றுகின்றது.
அதாவது, அரசிலுள்ள பலமான ஆளுமையுள்ள ஒருவரை அதற்காக இனங்காண்கின்றார்கள். அந்த வகையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க இது பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளத்தேவை இல்லை. ஏனென்றால், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இப்போழுதே புஷ்வாணமாகிவிட்டதென்று அவருக்கு புலனாகியிருக்கும்.
அது மட்டுமல்லாமல், அவரும் நானும் இந்த பாராளுமன்ற சபைக்குள் பிரவேசித்தது ஒரே காலத்திலாகும். அதாவது 1994 ஆம் ஆண்டில் தான் நாங்கள் இருவரும் பாராளுமன்றத்திற்கு முதன் முதலில் பிரவேசித்தோம். அப்போழுது பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கும் பேறு எனக்கு வாய்த்திருந்தது. அந்த முதல் ஆறாண்டு காலத்திலும் அவ்வாறு நான் பாராளுமன்ற அம்ரவுகளுக்கு தலைமை வகித்துக்கொண்டிருந்தேன்.
அந்தக் காலத்தில் அமைச்சர் ரவியுடைய ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியில் இருந்தபோது, நாங்கள் ஆளும் கட்சியில் இருந்தோம். அப்போழுது அவர்கள் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரையும், முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப்பையும் இலக்கு வைத்தார்கள். அந்த இருவருக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அப்பால், அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதே அவர்களுக்கு தேவைப்பட்டது.
அவ்வாறிருக்க, இப்பொழுதும் கூட ரவி கருணாநாயக்க என்ற ஆளுமையை தேர்ந்தெடுத்துள்ளதன் மூலம் அரசாங்கத்தைதாக்குவதே அவர்களது நோக்கமாகும். இந்தநாட்டின் பொருளாதாரத்தை சாடுவதுமாகும். நாட்டின் பொருளாதாரத்தின் மீது குறி வைப்பது தான் அவர்களது நோக்கமாகும் என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரிகின்றது.
பொருளாதார நிபுணர் பந்துலகுணவர்தனவின் திறமையில் முன்னர் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், குறி வைத்து ஈட்டியை எறிய அவர் எத்தனிக்கின்றார். ஆனால், அவர் குறிபார்ப்பது, மாறுகண்ணால் ஆகும். நாங்கள் எல்லோரும் அதையிட்டு கவனமாக இருக்கவேண்டும். சரியான கண் பார்வையுள்ள சூரரை நோக்கி மாறு கண்காரர் குறி வைத்தால் என்ன நடக்கப் போகின்றது?
எதிர்கட்சியில் இருக்கும் போது வறிய பொருளாதாரம், ஆட்சியில் இருக்கும் போது செழுமையான பொருளாதாரம் என்பது தான் அவரது கொள்கையாகும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக எமது நிதியமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி கூறுவதனால், முக்கியமாக அரசாங்கத்தின் வருவாயை நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 2005 ஆம் ஆண்டிலிருந்து பார்ப்போமானால், அன்று முதல் வீழ்;ச்சியை நோக்கி சென்றதை காண்கின்றோம். அது தான் இந்த பொருளாதாரத்தின் பாரிய பிரச்சினையாகவுள்ளது.
அந்த வீழ்ச்சியில் இருந்து கரைசேர்வதற்குதான் நாங்கள் முயற்சித்து வருகின்றோம். 2005ஆம் ஆண்டு நாட்டின் வருமானம், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில்; 100க்கு 20சதவீதமாக இருந்தது. 2012,2013,2014 ஆண்டுகளில் 100க்கு 15வீதமாக வீழ்ச்சிகண்டது. ஆனால், எங்களது நிதியமைச்சர் பதவியேற்றதிலிருந்து அது படிப்படியாக அதனை அதிகரிப்பதற்கு நாங்கள் எத்தனித்து வருகின்றோம்.
உள்நாட்டு உற்பத்தியோடு அரசாங்க வருமானத்தை பார்க்கின்றபோது, உள்நாட்டு உற்பத்திபொருட்களின் செலவினத்தோடு வரி மதிப்பிட்டை ஒப்பிடும் போது நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து வீழ்ச்சிப்போக்கையையே அவதானிக்கின்றோம். இப்போழுது அது ஏறு வரிசையில் செல்கின்றது. எமது நாட்டை போன்றவற்றில் தனிநபர் வருமானத்தின் நிலைமை இது தான்.
ஆனால், இது ஆசிய பிராந்தியத்தில் மிகவும் குறைவானது. எங்களது நிதியமைச்சர் அதிகரிக்கவே முயற்சிக்கின்றார். ஆதாயம் சேர் வரி (வெட்) வரியை சேகரிப்பதில் நாங்கள் வீழ்ச்சி போக்கிலேயே இருக்கின்றோம். வெட் வருமானத்தின் வீழ்ச்சிதான் மொத்த வரிவிதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகையால் தான் நாங்கள் வரி அறவீட்டை பொறுத்தவரை சில முக்கியமான சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டை உலகின் அதிசயமாக மாற்றுவதாக அவர்கள் கூறினார்கள்;. நாட்டை சுபீட்சத்தில் இருந்து படுகுழிக்குள் வீழ்த்திய துதான் அவர்கள் காட்டிய அதிசயம். இறுதியில் ஒரு சவாலை எதிர்கொண்டு இந்த நாட்டு மக்கள் விழித்தெழுந்தனர். அந்த ஆட்சியை புறக்கணித்து துரத்தியடித்தனர்.
வீண் விரயத்தை பற்றி கபீர் ஹாசிம் இங்கு விரிவாக கூறினார். குறிப்பாக, 5 வருட காலத்தில் ஏற்பட்ட வீண்விரயம் பற்றி இங்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, யுத்த வெற்றிக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட வீண்விரயத்தை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. எந்த பிஸ்கால் நியதியுமல்லாமல், பாரதூரமான வெளிநாட்டு கடன் பளுமிகக் கூடுதலான விலை அதிகரிப்பு என்பன இலங்கையின் வெளிநாட்டுகடன் தொகையை அதிகரிக்க செய்வதில் முடிந்தது. அதனால், வெளிநாட்டு நிதி உதவிகளான அபிவிருத்திகள் பாதிப்படைந்தன.
மிகவும் பாரதூரமான சமநிலையற்ற தன்மை காணப்பட்டது. நான் குறிப்பிட்டவாறு அரசாங்க வரி அறவீடு மற்றும் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வீதம் என்பவற்றுக்கிடையில் முன்னைய அரசாங்கத்தில் பாரதூரமான சமநிலையற்ற தன்மையும், வீழ்ச்சியும் காணப்பட்டது. அரசாங்க இறைவரித் திணைக்களத்தில் பாரதூரமான புறக்கணிப்பு, ஊழல்கள் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இறைவரித் திணைக்களத்தின் கவனமில்லாதபோக்கும், பாரதூரமான வரி விலக்கல்கள் அளிக்கப்பட்டதுமே அதற்கு காரணமாக அமைந்தது.
அரசாங்க ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வரிவிலக்குகள் வழங்கப்பட்டன. வரிசெலுத்தாமல் தப்பித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. வரிமதிப்பீடுகள் சரியான முறையில் கணிக்கப்படவோ, கண்காணிக்கப்படவோ இல்லை.
இறுதியாக வரிவிதிப்பு மட்டம் குறைவடைந்து போதிய வரியை சேகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. வரிமதிப்பீட்டையை சரியாக கணக்கிட்டு அறவிடும் வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இந்த பின்னணியில் தான் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்ததை பார்க்கின்றோம்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெறுமதிசார் வரியிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் நிலைமைக்கு முகம்கொடுப்பதற்காக வேறுபட்ட வரிவிதிப்புக்களை காலத்துக்கு காலம் விதிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் ஒரு வரி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அந்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வரையில் மர்மமாகவே இருந்து வருகின்றது. வரி அறவீட்டு முறைமையையும், வரி முகாமைத்துவ முறைமையும், அறிக்கைக்கு என்னவானது என்ற தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
நான் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழுவின் தலைவராக இருந்தபோது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் நடந்த பாரிய மோசடி ஒன்றை கண்டுபிடித்தேன். பெறுமதிசார் வரிமோசடிகளை நாங்கள் கண்டுபிடித்தோம். அதில் கணக்காய்வாளர் நாயகம் கண்டுபிடித்த தொகை 4பில்லியன் ரூபாய். ஆனால், எனது மதிப்பீட்டின் படி அதை விட 6 மடங்கு அதிகமாககும். பொது கணக்காய்வாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் என்னால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த பாரிய நிதிமோசடியை வரலாற்றில் முன் இடம் பெற்றிராத நிதிமோசடி என்ற அடிப்படையில் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
வரி அறவிடுவதில் குறைபாடுகள் காணப்படும் போது இவ்வாறான மோசடிகளை கண்டுபிடிப்பது கஷ்டமானதாகும். எவ்வாறாயினும், இந்த உயர் சபையானது பொது கணக்காய்வை பொருத்தவரை காவல் நாயாக செயற்படுகின்றது. நிதி அமைச்சருடைய பதவி காலத்தில் அவரது செயற்பாட்டை பாராட்டாமல் இருக்க முடியாது என்றார்.