தெஹிவளை பாத்யா மாவத்தை பெளசுல் அக்பர் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்காவுடன் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடியதையடுத்து பள்ளிவாசலில் விஸ்தரிப்பு பணிகள் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரமழான் மாதத்தில் பள்ளிவாசல் அமைந்திருக்கும் பிரதேசத்தில் விஸ்தரிப்பு பணிகளைக் காரணம் காட்டி முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படாமலிருப்பதற்கும், நல்லிணக்கத்தையும், பெரும்பான்மையினருடனான உறவினையும் பலப்படுத்துவதற்காகவுமே தற்காலிகமாக பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிசை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மொஹமட் யூசுப் விடிவெள்ளி க்குத் தெரிவித்தார்.
விஸ்தரிப்பு பணிகள் பிரதேச பெரும்பான்மை மக்களினது நல்லுறவைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரமழானின் பின்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்புக்காக தெஹிவளை கல்கிசை மாநகர சபையிடமிருந்து பள்ளிவாசல் நிர்வாகம் சட்டரீதியான அனுமதியைப் பெற்றிருந்தாலும் அப்பகுதி குருமார்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து தெஹிவளை கல்கிசை மேயர் விஸ்தரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளும் படியும் உத்தரவு பிறப்பித்திருந்தார். பொலிஸாரும் அழுத்தங்களைப் பிறப்பித்தனர். நிர்வாகங்களையும், வேலையாட்களையும் அச்சுறுத்தினர்.
கொழும்பு பள்ளி வாசல்கள் சம்மேளனம், தெஹிவளை கல்கிசை சம்மேளனம் என்பன பொலிஸாருடன் பேச்சு வார்த்தை நடத்தின. இறுதியில் முஸ்லிம் பாராளுமுன்றஉறுப்பினர்களும் அமைச்சர்களும் பிரதமருக்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்காவுக்கும் அழுத்தங்களைக் கொடுத்ததை யடுத்து வேலைகளை ஆரம்பிக்க வாய்ப்பு கிடைத்தது.
மீண்டும் பள்ளிவாசல் நிர்வாகம் தற்காலிகமாக விஸ்தரிப்புக் பணியினை நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.