நாச்சியாதீவு பர்வீன்-
இன்றைய தினத்தில் இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களினதும் ஒரேயொரு பொது எதிரி என்றால் அது பொதுபலசேனா எனும் பெளத்த தீவிரவாத அமைப்பே ஆகும். பெளத்த மதத்தினை காப்பாற்ற புத்த பெருமானாரால் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு ரவடிக்கும்பலாகவே தம்மை வெளிப்படுத்தி,செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது பொதுபலசேனா அமைப்பு. அதன் செயலாளர் அத்தனகொட ஞானசார தேரர் இன்னும் ஒரு படி மேலே போய் முஸ்லிம் சமூகத்தின் தன்மானத்தை குத்தி,கீறி ஆத்திரமூட்டும் செயற்பாட்டை மிகவும் இலாவகமாகவும், துணிச்சலுடனும் செய்து வருகிறார், முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற தமது மதத்தை ஒருவன் கொச்சைப்படுத்திவிட்டு சாதாரணமாக சென்று கொண்டிருக்க, நாம் கையை கட்டிக்கொண்டு என்ன நடக்கின்றது என்பதனை ஓரத்தில் நின்று வேவு பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
உண்மையான நல்லாட்சி இங்கு நிலவுமானால் இன்நேரம் மத நிந்தனை குற்றச்சாட்டில் ஞானசார தேரர் கம்பி எண்ணிக்கொண்டும்,களி தின்று கொண்டும் இருக்க வேண்டும். ஆனால் நல்லாட்சி,நல்லாட்சி என்று வாய்கிழிய கத்துகின்றோம்,எழுதுகின்றோம் அந்த நல்லாட்சியினை அரசாங்கம் வெளிப்படுத்துவதற்கும், நல்லாட்சியின் பலனை மக்களுக்கு வழங்குவதற்கு இன்னும் தயாரில்லை. என்பதனை ஞானாசாராவின் இந்த மீளெழுச்சி மிகத்தெளிவாக புடம் போட்டுக்காட்டுகிறது.
இந்த நல்லாட்சி மலரக்காரணம், இனவாதம் என்ற அடிப்படை வாதத்திற்கு மகிந்த ராஜபக்சவின் அரசு குடை பிடித்தமையாகும். காவி நிறப் பயங்கரவாதம் சிறுபான்மை சமூகத்தை பந்தாடி,சீரழித்த போதும் மன்னரோ,அவரின் அதீத விசுவாசிகளோ, அல்லது அவரது அடிவருடிகளோ அதனை கண்டு கொள்ளவில்லை. மாறாக மன்னரின் சகோதரர்கள் பொதுபலசேனா அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார்கள்.
நாட்டில் முஸ்லிம்களின் இருப்புக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை அழித்தொழிப்பதில் பொதுபலசேனா தலைமையிலான சிங்கள இனவாத அமைப்புக்கள் மிகத்தீவிரமாக இயங்கின. அதன் வெளிப்பாடாகவே பேருவளை,தர்காடவுன், அளுத்கம போன்ற பிரதேசங்களில் தனது உச்ச கட்ட வெறியாட்டத்தை பொதுபலசேனா நடாத்தி முடித்தது. பின்னர் நடந்த விடயங்கள் நாம் அனைவரும் அறிந்ததே.
சிறுபான்மைச் சமூகம் அதிலும் முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தைக்கோறியதும்,அதற்காக களத்தில் இறங்கி செயற்பட்டதும் மகிந்த மீதான வெறுப்பினால் அல்ல, மாறாக மகிந்தவின் அனுசரணையில் பொதுபலசேனா இயங்குகிறது, எனவே இந்த ஆட்சியில் நமக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்காது என்ற அச்சத்தில் தான். அதே நிலவரம் இந்த நல்லாட்சியில் அதாவது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களின் தலைமையிலான இந்த ஆட்சியிலும் நிகழுமெனின் இந்த நல்லாட்சி அரசும் பொதுபலசேனாவுக்கும், அதன் செயலாளர் ஞானசாரவுக்கும் அஞ்சுகிறதா? என்ற கேள்வி இயற்கையிலேயே எழுகிறது.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாகவும், மதநிந்தனைக்கு இடமில்லை எனவும் அன்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கருத்துத்தெரிவித்தனர். அதனையும் மீறி ஞானசார மிகுந்த தைரியத்தோடு இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துகிற செயற்பாடுகளில் தொடர்ந்தும் இயங்குவதானது இந்த நல்லாட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஒரு அரசாங்கத்தின் அடிப்படைக்கடமைகளில் இருந்து அந்த அரசு பாரமுகமாக செயற்படுமாயின் சமாதானமான ஒரு ஆட்சியை மக்களுக்கு வழங்க முடியாமல் போகும். இந்த விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் கரிசனை காட்டுவதற்கான எந்த நல்ல சகுனத்தையும் இதுவரை காணவில்லை.
பொதுபலசேனா,சிங்களராவய,ராவண பலசேனா என பல இனவாத அல்லது முஸ்லிம் எதிர்ப்பு குழுக்கள் இப்போது பொது பலசேனாவின் கூறையின் கீழ் நீறுபூத்த நெறுப்பாக அடுத்தடுத்த இனவாத முஸ்தீபுகளுக்கு தயாராக காத்துக்கிடக்கின்றன.
இவை அனைத்தும் பொதுபலசேனாவின் கரங்களைப் பலப்படுத்தி, முஸ்லிம்களுக்கெதிரான கடும் போக்கை கடைபிடிக்கும் நிகழ்ச்சி நிரலை தயார்படுத்தும் வேலையில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், நமது அரசியல் தலைமைகளும் இது பற்றி வாய்மூடி இருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.
பொதுபலசேனா விடயத்தில் ஹகீம்-றிசாட் மற்றும் முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைய வேண்டும். வெறுமனே நல்லாட்சிக்கு சாமரம் வீசும் சராசரிகளாக நாமும் இருப்போமானால் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடந்த அதே கதியை இலங்கையிலும் இங்குள்ள முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டிய ஒரு நெருக்கடியான சூழல் தோன்றலாம். எனவே தேர்தல் காலங்களில் செய்கின்ற கட்சி அரசியலுக்கு அப்பால் இணைந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி,பிரதமர்,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு பொதுபலசேனா வின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கினைப் பற்றிய விளக்கத்தைக் கொண்டு செல்லவேண்டும். குழாயடிச் சண்டைகளை விடவும் நமது சமூகத்தின் பூர்வீகத்தை பாதுகாப்பதிலும்,அதனை உறுதிப்படுத்துவதிலும் ஒன்றிணைந்து செயற்படுவது வெற்றியளிக்கும். அவ்வாறே முஸ்லிம் ஊடகவியலாளர்கள் தமது எழுத்துக்கள் மூலம் பொதுபலசேனாவுக்கெதிரான கண்டனத்தை பதியவேண்டும்.
முஸ்லிம்கள் பெளத்த விரோதப் போக்கினை கொண்டவர்கள் அல்லர். தனிநாடு கேட்டு குழப்பம் விளைவித்து அல்லது அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்ட கரிபடிந்த வலராற்றைக்கொண்டவர்களல்லர். மாறாக எல்லா இன மக்களுடனும் ஒற்றுமையுடனும்,விட்டுக்கொடுப்புடனும் இணைந்து வாழ விரும்புகிற, இந்த நாட்டை நேசிக்கின்ற ஒரு சமூகம் என்ற அடிப்படை உண்மையை ஒவ்வொறு ஊடகவியலாளனும்,எழுத்தாளர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
பொதுபலசேனாவின் இந்த பகிரங்கமான இனவாதப் போக்கினை கண்டு கொள்ளாமல் இருக்குமளவுக்கு,பொதுபலசேனா செல்வாக்கினைக் கொண்டதா? அல்லது மஹிந்த தரப்பினரின் ஆதரவு பொதுபலசேனாவுக்கு இருப்பதனால் அவர்களை அடக்க நல்லாட்சி அரசு பின்வாங்குகிறதா? அல்லது இந்த நல்லாட்சி அரசில் பொதுபலசேனா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்கின்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா? இப்படி பல கேள்விகள் சாமான்யன் ஒருவனின் உள்ளத்தில் எழுந்து விடை தெரியாமல் காணாமல்போய் விடுகின்றது. எனவே இந்த நல்லாட்சி என்ற சொல்லின் அர்த்தத்தை மக்களுக்கு உணரச்செய்வதில் மிகவும் நேர்மையாக இந்த அரசு நடந்து கொள்ள வேண்டும் மாறாக கபடத்தனத்தையும், வெறும் நாடகத்தனத்தையும் கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாட்டை இந்த அரசு நடைமுறைப்படுத்துமாயின், இந்த நல்லாட்சியின் பங்காளர்களான முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள். நல்லாட்சி தன்னை நல்லாட்சியாக எப்போது நிரூபிக்கும்.