ஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவணி எம்.பி. யான உதய கம்மன்பில இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.35 மணியளவில் சபைக்குள் பிரவேசித்து அவருடைய ஆசனத்தில் சில நொடிகள் அமர்ந்து விட்டு உடனடியாக வெளியேறியிருந்தார்.
முன்னர் பாராளுமன்றில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன எம்.பி. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையின் அங்கமாகவே உதய கம்மன்பில எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இச்சமயத்தில் ஆளும், எதிர்த் தரப்பினரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சர்ச்சைகள் உருவாகியிருந்தன. இதன்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உதய கம்மன்பில சபைக்கு வெளியில் வருகை தந்திருப்பதாக கூறியதோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சைகையால் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சர்ச்சைகள் நீடித்திருந்தன. எனினும் உதய கம்மன்பில எம்.பி. சபைக்குள் வருகை தந்திருக்கவில்லை. இந்நிலையில் ஆட்பதிவு தொடர்பான திருத்த சட்டமூல விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிற்பகல் 3.35 அளவில் சபைக்குள் பிரவேசித்த உதய கம்மன்பில சிலநொடிகள் தனது ஆசனத்தில் அமர்ந்து விட்டு உடன் வெளியேறிச் சென்றிருந்தார்.
இச்சமயத்தில் ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினரில் பலர் ஆசனத்தில் அமர்ந்திருக்கவில்லை. அத்தோடு வேறெந்த உறுப்பினர்களும் அவருடன் பேசியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.