கூட்டு எதிர்க்கட்சியை பிளவடையச் செய்யவே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிக்க முயற்சிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
பொரளை என்.எம்.பெரேரா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சிக்கு தற்போது பாரியளவில் மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்று வருகின்றது. எனவே கூட்டு எதிர்க்கட்சியை பிளவடையச் செய்து அதனை பலவீனப்படுத்தும் நோக்கில் கோத்தபாய ராஜபக்சவை சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை பற்றி கூட்டு எதிர்க்கட்சிக்கு போதியளவு தெளிவுண்டு.
இந்த யோசனையை ஜோன் செனவிரட்ன கொண்டு வந்தாலும் அதன் பின்னணியில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இருக்கின்றார்.
கூட்டு எதிர்க்கட்சியை பிளவடையச் செய்யும் யோசனைகள் நன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது பற்றி அமைச்சர் செனவிரட்னவிடம் நான் வினவியிருந்தேன், அதன் போது கட்சியை ஒன்றிணைக்கவே இந்த யோசனை என கூறியிருந்தார்.
அமைச்சருக்கு ஆரம்பம் மட்டுமன்றி இறுதியும் மறந்து போயுள்ளது என வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.