தனது முதலமைச்சரை பாதுகாத்து இனவாதிகளின் சதித்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டாரா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்?

முகம்மத் இக்பால்-

ரசியலில் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்று மறக்கப்படுவதென்றால் இன்னுமொரு சர்ச்சைக்குரிய புதிய விடயம் ஒன்று அரசியல் அரங்கத்துக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து குறிப்பிட்ட பழய விடயம் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும். அதுபோலதான் கிழக்குமாகான முதலமைச்சரின் விடயமாகும். 

கிழக்குமாகான முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய விடயமானது, முதலமைச்சர் என்ற நிலையிலிருந்து பின்பு முஸ்லிம் காங்கிரஸ் என்ற நிலைக்கு மாறி, அதன்பின்பு முஸ்லிம் என்ற தோற்றத்தை பெற்று, இறுதியில் இந்த நாட்டை பாதுகாத்த படைவீரரை முஸ்லிம்கள் அவமானப்படுத்தி உள்ளார்கள் என்று தென்னிலங்கையில் விஷம பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் எதிர்காலங்களில் சிங்கள - முஸ்லிம் இன வண்முறை ஒன்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையும், அதனை வைத்து ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்குரிய சாதகமும் தென்பட்டதனால் அதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கிலும், இப்பிரச்சினையிலிருந்து தனது முதலமைச்சரை காப்பாற்ற வேண்டும் என்ற ரீதியிலும் தடுப்பு காவல் ஒன்றினை ஏற்படுத்தி உள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள். 

கிழக்கின் முதலமைச்சர் எமது சமூகத்தவர் என்ற நிலையினை மறந்து, தனது அரசியல் எதிரி என்ற கோணத்தில் மட்டும் நோக்கியதன் காரணமாக கிழக்கு முதலமைச்சர் படை வீரருக்கு எதிராக நடந்து கொண்டது தவறு என்றும், அநாகரிகமானது என்றும், எம்மவர்களே வரிந்துகட்டிக்கொண்டு போர்க்கொடி தூக்கினார்கள். அதேபோல நாட்டை காப்பற்றிய படை வீரர்களை அவமானப்படுத்தி உள்ளார் என்று முதலமைச்சருக்கு எதிராக தென்னிலங்கையில் ,எதிர்ப்பு பேரணிகளும், சிங்கள இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. எனவே இந்த விடயத்தில் எம்மவர்களுக்கும், சிங்கள இனவாதிகளுக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசங்களும் இருக்கவில்லை. 

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனாவின் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து தான் ஆட்சி பீடத்தில் ஏறுவதற்கு சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு, கிழக்கு முதலமைச்சரின் விவகாரமானது பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல இருந்தது. அதனால் இப்பிரச்சினையை அரசியலாக்கி, தெற்கிலே சிங்களவர்கள் மத்தியில் இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கபட்டு, பௌத்த தேரோக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராகவும், தன்னை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு காரணமாக இருந்த முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். அத்துடன் இதனை நாடு பூராவும் விஸ்தரிக்கும் பாரியளவான ஏற்பாடுகளும் திட்டமிடப்பட்டிருந்தது. 

இவ்வாறான மகிந்த ராஜபக்சவின் அரசியல் காய்நகர்த்தலினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அறிந்துகொண்டதனால், அதனை தடுத்து தனது முதலமைச்சரை காப்பாற்றும் நோக்கில் நகர்த்திய விடயம்தான் பகிரங்க மன்னிப்பு என்ற சூசகமான வார்த்தை பிரயோகமாகும். இதன்மூலம் தனது அரசியல் எதிரிகளினால் தனக்கு எதிராக பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்படும் என்று தெரிந்திருந்தும் தனது தலையை கொடுத்துள்ளார். 

இது கடந்தகாலத்தில் காவி உடை தரித்த பயங்கரவாதிகள் என்று இனவாத பௌத்த பிக்குகளை விமர்சித்ததன் காரணமாக, தனக்கு ஏற்பட்ட இதுபோன்றதொரு விடயத்தினை சுட்டி காட்டினாரே தவிர, பகிரங்கமாக மன்னிப்பு கோரித்தான் ஆகவேண்டும் என்று தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அழுத்தம் திருத்தமாக ஒருபொழுதும் கூறவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரது உரையினை சில ஊடகங்கள் உண்மைக்கு மாறாக பிரசுரித்திருந்தது. இருந்தாலும் அவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இன்னும் எமக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. 

உண்மையில் முதலமைச்சரினை பகிரங்க மன்னிப்பு கோருமாறு அழுத்தமாக கூறுவதாக இருந்தால், தலைவர் என்ற ரீதியில் தனிப்பட்ட முறயில் அழைத்தோ, அல்லது கட்சியின் அதியுயர்பீட கூட்டத்தினை கூட்டியோ வலியுறித்தி இருப்பார். ஆனால் இவைகளை தவிர்த்து, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் தனது முதலமைச்சரை மன்னிப்பு கோருமாறு கூறுவாரேயானால்இ அதில் புதைந்துகிடக்கும் மர்மங்களை நன்கு ஆழமான அரசியல் அறிவு உள்ளவர்களினால் மட்டுமே அறிந்துகொள்ள முடிடியும். 

இங்கே வேடிக்கை என்னவென்றால், கிழக்கின் முதலமைச்சர் நாகரீகமாக நடந்துகொள்ளவில்லை என்றும், அவர் நடந்துகொண்டது முற்றிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் போட்டி போட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டவர்கள் அனைவரும், தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் உரையினை அடுத்து அதன் உண்மையான அர்த்தத்தினை புரிந்துகொள்ளாது, முதலமைச்சர் செய்தது சரி என்று உடனடியாக குத்திக்கரணம் அடித்து விட்டார்கள். அதாவது மன்னிப்பு கோரக்கூடாது என்றும், ரவுப் ஹக்கீம் அவர்கள் தனது முதலமைச்சரை காட்டி கொடுத்து விட்டார் என்றும் கூறி வழமை போன்று தனது நிறத்தினை மாற்றியுள்ளார்கள்.  

அதுமட்டுமல்லாது கிழக்கின் முதலமைச்சரை மன்னிப்பு கோருமாறு தலைவர் ரவுப் ஹக்கீம் கூறிவிட்டார். அதனால் முதலமைச்சரின் கடற்படை அதிகாரிக்கு எதிரான செயற்பாட்டினை சரி என்று எழுதிய முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் இப்போது என்ன செய்யப்போகின்றார்கள் என்றும், தலைவரின் பக்கமா? அல்லது முதலமைச்சரின் பக்கமா? என்றும் கேள்வி எழுப்புகின்றார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுகின்றது. 

எனவேதான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கிழக்கு முதலமைச்சரை மன்னிப்பு கோருமாறு கூறிய அந்த வார்த்தை பிரயோகம் மூலம், பாரிய இனவாத சிக்கல் ஒன்றிலிருந்து கிழக்குமாகான முதலமைச்சரை, அவரது தலைவர் என்ற ரீதியில் தனது கடமையினை மிகவும் மதிநுட்பமான முறையில் கையாண்டு பிரச்சினையிலிருந்து காப்பாற்றி உள்ளார். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் பின்னணியுடன் இந்த பிரச்சினையை தனக்கு சாதகமாக்கி ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக தென்னிலங்கை இனவாதிகளையும், பௌத்த பிக்குகளையும் தூண்டிவிட்டு நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ள இருந்த அரசாங்கத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பாரிய இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் அறிக்கைக்கு பின்பு கிழக்கின் முதலமைச்சர் விவகாரம் இப்போது தென்னிலங்கையில் சூடு தணிந்துள்ளது. இதுதான் சானாக்கியமான அரசியல் தந்திரோபாயமாகும். இதனை புரிந்துகொள்ளாமல் தலைவர் மன்னிப்பு கோர சொல்லியுள்ளார் என்று எடுத்த எடுப்பில் விமர்சிப்பது தங்களது அறியாமையின் வெளிப்பாடாகும். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -