ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டு அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு இராணுவத்தில் இருக்கும் பாஷிச வாத கொள்கையுடைவர்கள் உதவி புரிவதாகவும் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தினை வீழ்த்தும் வகையில் சில போலியான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.
கடந்த அரசாங்கத்தில் இராணுவத்தில் இருந்த பாஷிச வாதிகளே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் எதுவித காரணங்களும் வெளியிடப்படாத நிலையில், அது அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.