பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனை நீக்க கூட்டமைப்பின் உயர்மட்டம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (25) எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வட மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கீழ் இயங்குவதாகவும் குறிப்பிட்டு இத்தீர்மானத்தை கூட்டத்தில் கலந்து கொண்டனவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் வடக்கு மாகாண சபையை இறுதி இரண்டரை வருடத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கும்.இதனிடையே சபையில் குழப்பங்களை ஏற்படுத்துவோரை மாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.அத்துடன்கூட்டமைப்பிற்கு கிடைத்த இரு போனஸ் ஆசனத்தில் தமிழ் முஸ்லீம் உறவிற்காக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு வழங்கப்பட்டது.
தற்போது இப்பதவி இவருக்கு வழங்கப்பட்டு இரண்டரை வருடம் பூர்த்தியாகியுள்ளது. எனவே இந்த போனஸ் ஆசனத்தை அய்யூப் அஸ்மீனிடம் இருந்து மற்றுமொரு முஸ்லீமிற்கு வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அய்யூப் அஸ்மீன் வடக்கு மாகாண சபையில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதுடன் மாகாண சபை உருவாக்கிய வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு திட்டத்தை ஆதரிக்காது விமர்சித்து உள்ளார். எனவே தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை மீறிச் செயற்படும் அஸ்மீனை நீக்கி வேறு ஒருவரை உறுப்பினராக்குமாறு கோரப்பட்டது.
இந்த முடிவு கூட்டத்தில் இருந்த அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தீர்மானம் எதிர்கட்சி தலைவர் இரா .சம்பந்தனின் தலைமையில் எடுக்கபட்டதுடன் 3 மணித்தியாலங்கள் இக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.