ஐ.நாவின் கொழும்பு காரியாலயம் முன்பாக சட்ட விரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உட்பட ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸார் இன்று கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம், ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹுசெயின் இலங்கையில் விஜயம் மேற்கொண்டார்.
இதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவிர உட்பட தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்தவர்கள் ஐ.நாவின் கொழும்பு காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தினார்கள்
அப்போது அந்த வீதியில் பயணித்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்தாக போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எனவே இதுகுறித்து சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்ய உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் குற்றப் பத்திரிக்கைகளை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆனால், தாங்கள் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.''இது அரசியல் காழ்ப்புணர்ச்சி''
இலங்கை ராணுவத்துக்கு எதிராக போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தவே ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் இலங்கை வந்ததாக தெரிவித்த விமல் வீரவன்ஸ அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் முலம் பொது மக்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை என்று கூறிய அவர் இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டினார்.