அய்ஷத்-பாலமுனை-
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுக்கான ஆரம்ப கட்ட போட்டிகள் தற்போது நடை பெற்று வருகின்றது.
அம்பாரை மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் பிரதேச செயலக மட்ட போட்டிகள் நடாத்தி முடிக்கப்பட்டு அப் போட்டிகளில் சம்பியனாக தெரிவான இளைஞர் கழகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட போட்டிகளின் குழு நிலைப் போட்டிகள் தற்போது அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளத்தின் ஏற்பாட்டில் நடந்து வருகின்றது.
இதில் மாவட்ட மட்ட குழு நிலை போட்டிகளில் ஒன்றான எல்லே விளையாட்டு போட்டி 04.06.2016 அன்று நடைபெற்று முடிந்த்து. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அட்டாளைச்சேனை, தமன, திருக்கோவில், கல்முனை தமிழ், அம்பாறை பிரதேச செயலகங்களை பிரதிநிதிப்படுத்திய அணிகள் பங்கு பற்றியது.
இதன் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவு இளைஞர் சம்பியன் பாலமுனை அல் அறபாத் இளைஞர் கழகமும் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவு இளைஞர் கழகமும் தெரிவாகின.
முதலில் துடுப்பேந்திய அறபாத் இளைஞர் கழகம் 8 ஓட்டங்களை பெற, பதிலுக்கு துடுப்பேந்திய கல்முனை தமிழ் பிரிவு இளைஞர் கழகம் வெறும் 2 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால், பாலமுனை அறபாத் இளைஞர் கழகம் அபார வெற்றி பெற்று அம்பாரை மாவட்ட எல்லே சம்பியனாக மகுடம் சூடிக் கொண்டது.
இதன் மூலம் பாலமுனை அல் அறபாத் விளையாட்டுக் கழகம் தேசிய மட்ட இளைஞர் விளையாட்டு விழா 2016 ல் பங்குபற்றும் தகுதியைப் பெற்றது.