புதிய அரசியலமைப்பு வரைவு ஒன்று இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதாக புதிய அரசியல் யாப்பு தொடர்பாக மக்களின் கருத்துக்களை பதிவு செய்த விசேட குழுவின் தலைவர் லால் விஜேயநாயக்க கூறினார். அந்தக் குழுவின் அறிக்கை அண்மையில் பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய அரசியல் யாப்பு மறுசீரமைப்பு சம்பந்தமான இணைக்குழு அடுத்த வாரம் தமது பணிகளை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைப்படி இறுதி வரைவு தயாரிக்கப்படும் என்பதுடன், அது அரசியலமைப்பு பேரவையின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்பட்ட வரைவு அமைச்சரவையில் தாக்கல் செய்த பின்னர் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு அது பாராளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மையுடனும் மக்கள் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்படும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்குவது தொடர்பான யோசனை பிரதமரினால் கடந்த ஜனவரி 09ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.