பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில திடீரென கைது செய்யப்படவில்லை எனவும், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொள்வனவு செய்த ஒரு இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான தனிப்பட்ட பங்குகளை மோசடியான முறையில் விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகளுக்கு அமைய உதய கம்மன்பில, ஜயம்பதி கிளரி பெரேரா ஜயசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி சந்தேகநபர்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எது எவ்வாறு இருப்பினும் உதய கம்மன்பில கைது செய்யப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.