இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது கட்சியின் முக்கியஸ்தர் முத்து சிவலிங்கத்துக்கு முறையே அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு நல்லாட்சி அரசு தீர்மானித்திருந்தது.
இந்நிலையில், இவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைக்கிறது. இதேநேரம், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் சாத்தியங்கள் தென்படுகின்றன.
அமைச்சர் திகாம்பரம் உட்பட்ட மலையகத்தை பிரதிநிதித்துப்படுத்தும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாகவே அரசாங்கம் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்கும் எதிராக மலையகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.
இப்படியான ஒருவருடன் தம்மால் அரசாங்கத்தில் இருக்க முடியாது எனவும் திகாம்பரம் உட்பட மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடமும். பிரதமரிடமும் கூறியுள்ளனர்.
இவர்கள் முன்வைத்த விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு அமைச்சு பதவிகளை வழங்காது, கட்சியின் ஆதரவை மாத்திரம் பெற்றுக்கொள்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.