அவதானி-
சின்னத்தம்பி திரைப்படத்தின் கிளைமக் காட்சியில் மனோநிலை குன்றிய ஒருவர் தாலியை கையில் எடுத்துக் கொண்டு எனக்குக் கலியாணம் எனக்குக் கலியாணம் என சந்தோசத்தில் கத்திக் கொண்டு மனோரமாவுக்கு தாலி கட்ட வருவதற்கு ஒப்பானதே இன்று கிழக்கின் எழுச்சி என்ற பேரில் முஸ்லிம் காங்கிரஸின் உரிமையாளர்கள் தாங்கள்தான் என்று சிலர் போடும் கோஷம் அமைந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கிழக்குக்கு குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களது வாதம். வாதம் சரியா பிழையா என பார்ப்பதற்கு முன்னர் இக்கோஷம் போடும் கூத்தாடிகள், இவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகள் யாரெனில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டுமென்ற நோக்கில் கடந்த காலங்களில் செயற்பட்டு தோற்றுப் போனவர்களாவார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை அழிக்க முடியாது என பாடம் படித்தவர்கள் கிழக்குக்கு தலைமைத்துவம் என்ற துடுப்பை தற்போது கையில் எடுத்துள்ளனர். இந்த கோஷத்துக்கு வலுச்சேர்ப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. இதனை வேறு வடிவில் சொன்னால் கிழக்குக்கு தலைமைத்துவம் என்ற கோஷத்தின் மூலகர்த்தா அவரது சம்பந்தி மலையடிவார அரசியல் முனிவர் சேகு இஸ்ஸதீன். அவரின் மகனும் ஹசன் அலியின் மருமகனுமான அஸ்ஸுஹூர் இக்கோஷத்தின் பிரதான செயற்பாட்டாளராவார். இக்குடும்ப நாடகத்திற்கு ஹீரோ வேஷம் வபா பாறுக் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களது கோஷத்தை நோக்கினால், இது அடிப்படையில் பிழையான எண்ணக் கருவாகும். ஏனெனில், தேசியக் கட்சியான இக்கட்சியின் பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். இக்கட்சியை விஸ்தரித்து அனைத்து சமூகங்களுக்கும் உரிய கட்சியாக மாற்ற வேண்டுமென்ற நோக்கில் தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சி மர்ஹூம் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் வரலாற்றுப் பின்னணியை சரிவர புரிந்த ஒருவர் ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை குறுநில கட்சியாக கிழக்கோடு மட்டுப்படுத்தி, அதனது தலைமைத்துவம் கிழக்கில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று வாதிடமாட்டார். இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சியமைத்தவர்கள் கூட இது போன்ற கோஷத்தை முன்வைக்கவில்லை.
இது போன்றதொரு கோஷம் வலுபெறுவதற்கு பிரதான காரணம் அமைச்சர் ஹக்கீம் மீது கொண்ட காழ்புணர்ச்சி என்றால் அது மிகையாகாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் கூட அமைச்சர் ஹக்கீமின் வார்த்தைக்காக வேண்டி மக்கள் தெரிவு செய்துள்ளனர் எனில் இந்த தலைமைத்துவத்தை அம்பாறை மக்கள் முழுமையாக அங்கீகரித்துள்ளனர் என்றே அர்த்தமாகும்.
கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத்தின் விவகாரத்தை அமைச்சர் ஹக்கீம் அணுகிய விதம் ஒரு தேசியக் கட்சியின் தலைவன் செய்த சாணக்கிய நகர்வு என்பதை தேசிய மட்டத்தில் இருந்து நோக்கினால் அவதானிக்க முடியும். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் என அனைவரும் சேர்ந்து ஏற்படுத்திய நல்லாட்சிக்கு ஆப்பு வைக்கும் நோக்கில் இராணுவத்தை பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க மஹிந்த தரப்பு செய்த முயற்சியை ஹக்கீமின் அணுகுமுறை தடுத்து, இந்த நாட்டின் நல்லாட்சிக்கு பாதுகாப்பு வேலி அமைத்தது என்றால் அது மிகையாகாது. இது போன்ற தலைவனே இக்கட்சிக்கு தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
நாவலப்பிட்டியில் பிறந்த ஹக்கீமை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அடையாளம் கண்டு, கட்சியின் செயலாளராக நியமித்து, தேசியப்பட்டியல் வழங்கி, பாராளுமன்ற குழுக்களின் தலைவராக ஆக்கி கௌரவித்ததே ஹக்கீமின் ஆளுமைக்கு மிகப் பெரும் சான்றாகும்.
இவர்கள் முன்வைக்கும் மற்றுமொரு குற்றச்சாட்டுத்தான் ஹக்கீம் கடந்த ஆண்டுகளில் முஸ்லிம்களின் உரிமை விடயத்திலோ அபிவிருத்தியிலோ எதனையும் மக்களுக்கு செய்யவில்லையென்ற வாதமாகும். பாராளுமன்றில் சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சர் ஹக்கீம் முதன்மை இடத்தை ஹன்சார்ட்டில் பதிவு செய்துள்ளார் என்பதுவே அவர் உரிமைகள் விடயத்தில் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு சான்றாகும்.
அபிவிருத்தி விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாரிய முன்னெடுப்புக்களை கடந்த காலத்தில் மேற்கொள்ள முடியாமைக்கான காரணங்களை அஷ்ரபின் மரணத்தின் பின்னரான சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியிலிருந்து அவதானிக்க முடியும். அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாஹ் அவர்களுக்கு முழு அமைச்சும் தேசியப்பட்டியல் ஊடாக அன்வர் இஸ்மாயிலுக்கு பிரதியமைச்சு அதேபோன்று பேரியல் அஷ்ரப் அவர்களுக்கு முழு அமைச்சும் தேசியப்பட்டியல் ஊடாக சேகு இஸ்ஸதீனுக்கு பிரதியமைச்சும் சந்திரிகா அரசாங்கத்தில் வழங்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை அழிப்பதற்காகவே இவர்களுக்கு இந்த சன்மானம் அப்போது வழங்கப்பட்டது.
மஹிந்தவின் காலத்திலும் இதே நிலைமை. பொத்துவில் 10 பேர் படுகொலை, கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான்ன் நியமனம், அன்வர் இஸ்மாயிலின் மரணத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பஷில் ராஜபக்ஷ் எம். பி. ஆக நியமிக்கப்பட்டமை போன்ற விடயங்களில் அமைச்சர் அதாஉல்லாஹ் மஹிந்தவின் செல்லைப்பிள்ளையாக செயற்பட்டதனால் அபிவிருத்தி என்ற பேரில் சன்மானங்களை பெற்றுக் கொண்டு முஸ்லிம் காங்கிரசை அழிப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார்.
அதேபோன்று வடக்கில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பஷில் ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு, முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக செயற்பட்டார். இந்த இடத்தில் அதாவுல்லாஹ், றிசாத் அல்ல, அரசியல் கோமாளி உலமாக் கட்சித் தலைவர் முபாரக் மௌலவி இருந்திருந்தாலும் கூட மஹிந்தவிடம் இருந்து அபிவிருத்திகளை பெற்றிருப்பார். பொத்துவில் படுகொலை தொடர்பில் முஸ்லிம்களின் எதிரி கோடபாய ராஜபக்ஷ அமைச்சர் ஹக்கீமின் இராணுவ பாதுகாப்பை நீக்கி, மஹிந்தவின் ஆட்சிக் காலம் முழுவதிலும் பல்வேறு வழிகளில் பழிவாங்கியமை கசப்பான வரலாறாகும்.
கடந்த 16 வருட காலப்பிரிவில் முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு சவால்களை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எதிர்கொண்டே வந்தது. மஹிந்தவின் பல்வேறு சதிகளுக்கு மத்தியிலும் இந்தக் கட்சியை அழிந்து போகவிடாமல் கட்டிக் காத்ததே அமைச்சர் ஹக்கீம் செய்த மிகப் பெரும் சாதனையாகும்.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் சொற்ப காலத்திலே முஸ்லிம் காங்கிரஸ் பலநூறு வேலை வாய்ப்புக்களையும் அபிவிருத்திகளையும் ஆரம்பித்துள்ளது என்ற உண்மையையும் நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இந்த கட்சியில் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை இந்த நல்லாட்சி அரசாங்கத்திலே அடைந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம் கட்சியில் உள்ள அனைவரும் இதயசுத்தியோடு செயற்பட முன்வரவேண்டும். அதைவிடுத்து, குறுநில சிந்தனையில் கிழக்குக்கு தலைமைத்துவம் என்ற கோஷம் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு வெற்றியளிக்கப் போவதுமில்லை இனவாதிகளைத் தவிர.
இந்த நல்லாட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தின் வளர்சிக்கு பங்களிப்பு செய்யா விட்டாலும் பரவாயில்லை, இனவாதிகளின் சதிகளுக்கு அகப்படாமல் இக்கூத்தாடிகள் அனைவரும் செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.