கொஸ்கம, சாலாவ இராணுவமுகாம் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதையடுத்து, குறித்த வெடிவிபத்துக்குப் பொறுப்பேற்று இராணுவத் தளபதி உடனடியாக இராணுவத்தை விட்டு வெளியேறவேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செலயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கோத்தபாய ராஜபக்ஷ சிங்கள ஊடகம் ஒன்றுக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
வெடிவிபத்துக்கு இராணுவத் தளபதியே பொறுப்பேற்கவேண்டும். மிக முக்கியமான ஆயுதக் கிடங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாததாலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இதனை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டும். இல்லாவிட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் இந்த ஆயுதக் கிடங்குகள் பனாகொடவிலிருந்து சாலாவ இராணுவமுகாமுக்கு மாற்றப்பட்டது.
நான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தநேரம், ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை உணர்ந்து ஒரு தொகுதி கனரக ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தியத்தலாவ பகுதிக்கு மாற்றியிருந்தேன்.
இதன்பின்பு அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்தவரால் கொஸ்கம இராணுவத்தளத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
முன்னர் சாலாவ ஆயுதங்கிடங்கில் 25 டொன் வெடிபொருட்கள் இருந்தன. போர் முடிவுக்கு வந்த பின்னர், அங்கிருந்த பெருமளவு ஆயுதங்கள், வேயாங்கொட இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டன. வேயாங்கொட இராணுவ முகாம் பகுதி கூட பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதி தான்.
இதனால் பொதுமக்கள் செறிவாக வாழாத அநுராதபுரப் பகுதியிலுள்ள ஒயாமடுவ மற்றும் ரம்பேவ பகுதியில் உள்ள பளுகஸ்வெவ பகுதிகளில் இரண்டு ஆயுதங் கிடங்குகளைக் கட்டத் தீர்மானித்தோம்.
அதற்கான ஆரம்ப கட்டவேலைகள் நடைபெற்றபோது நாம் தேர்தலில் தோல்வியுற்றோம்.
இதன்பின்னர் இராணுவத் தளபதியாய் நியமிக்கப்பட்டவர், ஆயுதக் கிடங்குகளை மக்கள் குறைவாக வாழும் பகுதிகளுக்கு மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தார்.
அத்துடன் சாலாவ முகாமில் இருந்த 25 டொன் ஆயுதங்களை நாம் குறைத்ததால், இழப்புக்கள் குறைவாகக் காணப்பட்டது. இல்லாவிட்டால் அப்பகுதி பாரிய அழிவைச் சந்தித்திருக்கும் என அவர் தெரிவித்தார்.