ஏ.எம்.றிகாஸ்-
புரிந்துணர்வுடனான அபிவிருத்தி என்ற திட்டத்தின்கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் சர்வமத மாணவர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு- ஏறாவூரில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் தலைமையில் ஏறாவூர் அல்-ஜுப்ரிய்யா வித்தியாலய வாசிகசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டம் சேருவில் மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மாணவர்களுடன் ஏறாவூர்ப் பிரதேச மாணவர்களும் பங்குபற்றினர்.
நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன. இம்மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்து இன்முகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
இம்மாணவர்கள் தமது வாழ்வில் சகோதர சமூகத்தினரின் மார்க்க மற்றும் கலை, கலாசார விடயங்களை பரஸ்பரம் அவதானிக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
உலக தரிசன நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திட்ட முகாமையாளர் ஆர்எல் கோகுலன், திட்ட இணைப்பாளர்களான ரீ.இமானுவேல் மற்றும் ஜீ.பொஸ்கோ ஆகியோருடன் கிரான் பிராந்திய அபிவிருத்தி அலுவலக திட்ட இணைப்பாளர் திருமதி தர்மகுலராஜா கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிறுவர் கழகங்களை வலுவூட்டும் திட்டத்தின்கீழ் சர்வமத சுற்றுலாவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த இம்மாணவர்கள் பல்வேறு பிரதேசங்களையும் பார்வையிட்டனர்.