புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் தமது அமைச்சின் கீழ் வெளிநாட்டு கடனுதவிகளைப் பெற்றாவது, புதிய நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளம் கலசார மண்டபத்தில் வியாழக்கிழமை (02) மாலை இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடல் நிகழ்வில்; உரையாற்றும் போழுதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
புத்தள மாவட்டம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களை கலந்தாலோசிப்பதற்காக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், ஏனைய உயர் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்துக்கான நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவடையக் கூடிய புதிய நீர் வழங்கல் திட்டங்கள் சம்பந்தமாகவும் நாங்கள் ஆராய்ந்தோம்.
தேசிய நீர் வழங்கல் திட்டத்தில் 5 ஆவது கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள கலா ஓயாவியிலிருந்து மதுரங்குளம் வரையிலான நீர் வழங்கல் திட்டம் அடுத்த வருடத்திற்குள் நிறைவடையும்;.
தெதுறு ஓயாவிலிருந்து குருநாகல் மாவட்டத்திற்கும் கீரியங்கல்லி வரைக்கும் நீர் வழங்கல் திட்டமொன்றை கொண்டுவர இருக்கின்றோம். அதேநேரம் புத்தளம் மாவட்டத்திற்குமான திட்டங்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றோம்.
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கின்ற இந்நிலையில் இத்திட்டங்களை எப்படியாவது நிறைவேற்றி எம் மக்களுக்கான சுத்தமான குடிநீர் வசதியை வழங்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக செயற்படுகின்றோம்.
ஆனமடுவ நீர் வழங்கள் திட்டமொன்றுக்கும் அமைச்சரவையில் அனுமதியை பெற்று முன்னெடுக்கவுள்ளோம். இத் திட்டங்கள் அனைத்தையும் முழுமைப்படுத்துவதன் மூலம் புத்தளம் மாவட்டத்தில 60சதவீதமான பிரதேசத்தை நீர் வழங்கலினால் பூர்த்தி செய்ய முடியும் என நம்புகின்றேன்.
ஆனால், எங்களுக்கு பிரச்சினைக்குரிய விடயமாக கற்பிட்டி மற்றும் அக்கரைபற்று பிரதேசங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசங்களில் சாதாரணமாக நீர் வளமூலங்கள் இல்லாத காரணத்தினால், நீலத்தடி நீர் மோசமாக பாதிப்படைந்துள்ளது.
கலா ஓயாவிலிருந்து இதற்கு மேல் நீரை பயன்படுத்த எடுக்க முடியாது என நீர் பாசன திணைக்களம் அனுமதியளிக்காத நிலையில் எங்களால் கற்பிட்டி பிரதேசத்திற்கு தேவையான எந்தவித நீர் வழங்கல் திட்டங்களையும் முன்னெடுப்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
இதற்கு மாற்றீடாக கடலிலிருந்து நீரை பெற்று உவர்த் தன்மையை அகற்றி, சுத்திகரித்து வழங்குவதற்கான திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி தருவதற்காக முன்வந்துள்ளது.
அரச திறைசேரியில் கற்பிட்டி பிரதேசத்திற்கான நிதி ஒதுக்கீடு ஏதும் ஒதுக்கப்படாமையினாலும் இதற்கொரு தற்காலிக தீர்வொன்றாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி பாரிய இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்த இருக்கின்றோம். இதன் மூலம் ஒரு தாங்கிக்கு 1.60.000லீற்றர் கொள்ளளவு கொண்ட இரு தாங்கிகள் மூலம் மக்களுக்கான குழாய் நீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இவ்விரு தாங்கிகளின் மூலமும் தலா 7500 குடும்பங்களுக்குத் தேவையான நீரை பெற்றுக்கொள்ள முடியும்.
புத்தள மாவட்ட மக்களின் நீண்ட கால தேவையாகவுள்ள சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதிலுள்ள பிரச்சினையை தீர்த்து வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எனது அமைச்சின் கீழ் முன்னேடுப்பேன். மீதமுள்ள 4 வருடங்களுக்குள் வெளிநாட்டு கடனுதவிகளை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்வோமானால் புதிய நீர் வழங்கல் திட்டங்களை ஏற்படுத்தி குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுவிட முடியும் என்றார்.