வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, தனக்கு சாதகமான முறையில் சாட்சியமளிக்குமாறு தனது சாரதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக அரச சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாஜூடீன் கொலை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த முறைப்பாட்டை செய்ததாக பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி மிஸ்பாக் சத்தார் கூறியுள்ளார்.
அதேவேளை வழக்கில், அனுர சேனாநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது தரப்பு வாதி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனை சுவிசேஷமான விடயமாக கருதி, அவருக்கு பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அரச சட்டத்தரணி, அனுர சேனாநாயக்கவுக்கு பிணை வழங்கினால், சாட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படும் எனக் கூறினார்.
இதனையடுத்து பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்களின் அடிப்படையில் தன்னால், பிணை வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.