இணைந்து தமது கட்சியை பலப்படுத்துங்கள் - ஹக்கீம் வேண்டுகோள்

ஜெம்சாத் இக்பால்-

மாற்று கட்சியிலிருந்து பல சகோதரர்கள் தங்களுடன் இணைந்து தமது கட்சியைப் பலப்படுத்தி, கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தி, அடுத்த யுகத்தை நோக்கிச் செல்லும் இச்சந்தர்ப்பதில், சமூகம் சார்ந்த மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தாய் கட்சியைப் மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற அழைப்பை புனித நோன்பை முன்னிறுத்தி தாம் விடுப்பதாகவும், எதிர்வரும் காலங்களில் அதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடவிருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனர்த்த நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட கட்சியின் தொண்டர் அணியினரை கௌரவிக்கும் வகையில் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இப்தாருடன் கூடிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19) சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் பள்ளிவாசலில் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார். 

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, 

இந்த ரமழான் மாதத்திலுள்ள சிறப்புக்களில் எங்களுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டிய இரண்டு சிறந்த பண்புகள் முக்கியமானவையாகும். அவற்றில், முதலாவது தாராளத்தன்மையும், இரண்டாவது சகிப்புத் தன்மையுமாகும். 

இம்மாதத்தில் கொடுக்கப்படுகின்ற ஸதகா, ஸக்காத், தர்மத்தை மிகவும் தாராளமாக கொடுத்து அல்லாஹவிடத்தில் அதற்கான மகத்தான கூலியை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். 

அதுபோலவே, சகிப்புத் தன்மையையும் நாம் பேண வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, அரசியலில் ஈடுபடுகின்ற நாங்கள் அடிக்கடி தர்க்கித்துக் கொண்டும், வாக்குவதங்களை வளர்த்துக்கொண்டும், மிகக் கேவலமான முறையில் ஆளுக்கு ஆள் வசைப்பாடும் நிலவரங்கள் போட்டி அரசியலில் இப்பொழுது இன்றியமையாத ஓர் அங்கமாக ஆகியிருக்கின்றது.

இந்நிலையில், இஸ்லாமிய அரசியலை அடியொட்டி நடக்கின்ற கட்சிகள் என்று எங்களை அடையாளப்படுத்துகின்ற போது, சகிப்புத் தன்மை என்ற விடயத்தை உள்வாங்கிச் செயற்பட வேண்டும். வெறுமனே, புனித ரமழான் மாதத்தில் பசியை மாத்திரம் சகித்துகொள்ளாமல், கோபத்தைக் கட்டுப்படுத்தி, மற்றவர்களோடு முரண்படுவதை இயன்றவரை தவிர்த்து நடப்பதில் அவதானத்தை செலுத்த வேண்டிய தலைமைகளே இன்று அதற்கு நேர் மாற்றமாக, தாறுமாறாக ஒருவரை ஒருவர் பலவிதமான காழ்ப் புணர்ச்சிகளின் காரணமாக விமர்சித்துகொண்டிருக்கின்ற நிலவரங்கள் உருவாகியுள்ளன. 

இந்நிலைமை மாறி தாராள தன்மையுடன் செயற்பட வேண்டும். தாராளத் தன்மை என்பது திரவியத்தையும், தானியத்தையும், பணத்தையும், மற்றவர்களோடு பங்கிடுவது என்பது மட்டுல்ல, தனக்கென்றுள்ள பதவிகளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பதிலும் தாராளத்தன்மை இருக்கின்றது. ஏனென்றால், தாராளத்தன்மை என்பது நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும் பரந்துபட்டது. 

எமது சமூகத்தில் ஏற்படுகின்ற சகல விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்கின்ற தனிப் பெரும் கட்சியாக எமது இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் இந்த ஊரைச் சேர்ந்த உலமாக்கள், புத்தி ஜீவிகள் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் தான், சமூகம் இன்னலுறும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இந்தக் கட்சியைப் பலப்படுத்தி அதனூடாக இந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதற்கு இந்த சம்மாந்துறை மண் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. 

எனவே, இக்கட்சி இம்மண்ணில் அவ்வப்போது சில பிரச்சினைகளையும், பிளவுகளையும் சந்தித்துள்ளது. அதன் விளைவினால், அதனுடைய ஆட்சி அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் பலவித சோதனைகளை சந்தித்துள்ளோம். ஆனால், சமூகம் சார்ந்த விடயங்களில் எமது இயக்கம் தனது தலையாய கடமையென எண்ணி, முன்னணியில் நின்று போராடியுள்ளது என்ற விடயத்தில் இந்த ஊரைச் சேர்ந்த எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. 

இதன் நிமித்தம் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும், மாகாண சபை தேர்தலின் போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவால்களை சந்தித்தாலும், இந்த சம்மாந்துறை தொகுதி அதனுடைய அந்தஸ்த்தை பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தனது ஒத்துழைப்பை நல்கியது. 

இடையிடையே முகங்கொடுத்த பிளவுகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக கிழக்கில் மாகாண சபை ஆட்சியை முஸ்லிம்கள் கைபற்றக் கூடிய பேரம் பேசும் சக்தியாக இந்த இயக்கத்தின் உரிய தனித்துவமான சின்னத்திற்கு மிகுந்த ஆர்வத்தோடு இம் மக்கள் வாக்களித்து இந்த அந்தஸ்த்தை பெற்றுத் தந்தார்கள் என்பதை நன்றியுடன் நினைவுபடுத்திக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், ஆரிப் சம்சுதீன், சம்மாந்துறை ஜம்இய்யித்துல் உலமா சபை தலைவர், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -