மத்திய மாகாணத்தில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பிரதேசங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வதற்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் ஆகியோர், மத்திய மாகாண சுகாதார அமைச்சில் கள்ளத்தனமாக கலந்துரையாடலொன்றை நடத்தியதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்து நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அக்குரணை வைத்தியசாலை தவிர ஏனையவை பெரும்பான்மை இனத்தவர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலேயே அமைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு மாகாண சுகாதார அமைச்சரை அழைக்க முடியாமல் போனமை குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவலை தெரிவித்துள்ளதாகவும்;, மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுடன் அங்கு நடத்திய கலந்துரையாடலின் போது மத்திய மாகாணத்தில் நிலவும் சுகாதார பிரச்சினைகளை சரிவர அடையாளம் கண்டு அவற்றிற்;கு உரிய தீர்வுகளை காணும் விதத்தில் பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள வையாவன,
மாகாண சுகாதார அமைச்சிற்கு பிரவேசிக்கும் வீதியில் வாகன நெருக்கடியும், போக்குவரத்து தடையும் ஏற்பட்டதன் விளைவாக அந்த அமைச்சில் கூட்டமொன்று நடைபெற்றதாக தெரியவந்ததையடுத்து மத்திய மாகாண சபையில் கேள்விகள் எழுப்பப்பட்டதாக சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படும் போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள், மாகாண அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் எனப் பாகுபாடு காட்டாமல் அவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் கொள்கை அடிப்படையில் எடுத்துள்ள தீர்மானத்தை செயலுருப்படுத்துவதன் ஒரு கட்ட நடவடிக்கையாகவே பிரஸ்தாப கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அத்துடன், செய்திகளில் வெளியாகியவாறு, அந்தக் கலந்துரையாடல் மாகாண அமைச்சரின் அலுவலகத்தில் அல்லாது, மாகாண சுகாதார பணிப்பாளரின் அலுவலகத்திலேயே நடைபெற்றும் உள்ளது.
அதன் போது மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டிய மற்றும் குண்டசாலை பிரதேசங்களுக்கு புதிய வைத்தியசாலைகள் இரண்டை நிர்மாணிப்பதாகவும் பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்திற்கான கட்டடமொன்றை அமைப்பதாகவும் கலந்துரையாடப்பட்டதோடு, அதற்காக மத்திய அரசின் சுகாதார அமைச்சரினதும், மாகாண சுகாதார அமைச்சரினதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கண்டி மாவட்டத்தில், தெல்தொட்டை, கட்டுகஸ்தொட்டை, கலகெதர, அக்குரணை, தலாத்துஓய, நாவலப்பிட்டி, மடுல்கல, தொட்டலிகொட ஆகியவற்றுக்கான வைத்தியசாலைகளையும், நுவரெலியா மாவட்டத்தில் ஹபுகஸ்தலாவை மற்றும் ரிகில்லகஸ்கட வைத்தியசாலைகளையும், மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை வைத்தியசாலையையும் அவற்றின் தற்போதைய நிலைமையை விட, மேலும் சிறப்பாக அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசின் சுகாதார அமைச்சரின் அங்கீகாரத்துடன் 1100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் அங்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்த ஒதுக்கீடு வழமையாக அந்த வைத்தியசாலைகளுக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்படும் நிதிக்கு மேலதிகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடக செயலாளர்