பா.திருஞானம்-
கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதகிருஸ்ணன் அவர்களின் தலையீட்டினால் சபரகமுவ ஆசிரிய உதவியாளர்களை பயிற்சிக்கு விடுவிக்குமாறு ஆளுநர் கட்டளை.
சபரகமுவ மாகாணத்தில் இருந்து ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய உதவியாளர்கள் அனைவரையும் விடுவிப்பதற்காக மக்கள் ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட தலையீட்டின் பின்னர், அதிபர்கள் விடுவிப்பதற்கு விருப்பு கடிதம் வழங்கும் ஆசிரிய உதவியாளர்களை பயிற்சிக்கு விடுவிப்பதற்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் உடன்பட்டதோடு அதனை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
அதிபர்கள் விடுவிக்காத ஏனைய ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சிக்கான உரிமையை உறுதி செய்வதற்காக மக்கள் ஆசிரியர் சங்கம் சபரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ மார்சல் பெரேரா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது.
ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சி உரிமை மீறலின் பாரதூரத்தன்மை, ஆசிரிய உதவியாளர் நியமனத்தின் தன்மையை உணர்ந்து பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் பயிற்சிக்கு விடுவிக்குமாறு ஆளுநர் சபரகமுவ மாகாண கல்வி பணிப்பாளருக்கு கட்டளை விடுத்திருந்தார். அக்கட்டளை பிறப்பித்திருந்த கடிதத்தில் ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சி உரிமை தொடர்பில் இனவாத கண்ணோட்டத்தில் அதிகாரிகள் செயற்படுகின்றமையை சுட்டி காட்டி இருந்தார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார். எனினும் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆளுநரின் கட்டளையை ஏற்க மறுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ இராதகிருஸ்ணன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
சபரகமுவ மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கி நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளித்த நிலையில் ஆசிரிய பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் பயிற்சிக்கு விடுவிக்க எந்த தடையும் இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் ஆளுநருக்கு தெரிவித்தமையை சுட்டிக்காட்டி, சபரகமுவ மாகாண கல்வி பணிப்பாளருக்கு தனது கட்டளையை நடைமுறைப்படுத்துமாறு மீள வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் தொடர்ந்து சபரகமுவ மாகாண கல்வி பணிப்பாளரும் செயலாளரும் ஆசிரிய உதவியாளர்களை பயிற்சிக்கு விடுவிக்காதுள்ளனர். எனவே, சபரகமுவ மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளின் செயற்பாட்டை ஜனாதிபதி தலையிட்டு ஆளுநரின் கட்டளைக்கு அமைய அதிகாரிகள் செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே சபரகமுவ ஆசிரிய உதவியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.