அஷ்ஷெய்யத் அலவி மௌலானாதான் எனக்கு 'முஜிபுர் ரஹ்மான்' என்ற நாமத்தை சூட்டினார். முஹம்மத் முஹீன் என்ற எனது இயற் பெயரை அவரே மாற்றி முஜிபுர் ரஹ்மானாக்கினார் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அலவி மௌலானாவின் மறைவையொட்டி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொழிற்சங்கவாதியான அஷ்ஷெய்யது அலவி மௌலானா தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர் ஆவார். அவரின் போராட்ட அரசியலால் கவரப்பட்டு 1990 களில் அவருடன் இணைந்து செயலாற்றினேன். இதன்போதே அவர் என்னை முஜிபுர் ரஹ்மான் என்று அழைப்பார். அவரால்தான் முஹீன் ரஹ்மான் என்கிற என பெயர் முஜிபுர் ரஹ்மானாக மாற்றிக்கொண்டேன்.
அஷ்ஷெய்யது அலவி மௌலானா ஈராக்கில் அமெரிக்காவின் தாக்குதல்களை கண்டித்து பல ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். அத்துடன் பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதல்களையும் வன்மையாக கண்டித்தார்.
அஷ்ஷெய்யத் அலவி மௌலானாவின் இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்லாது தொழிற்சங்க வாதிகளுக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் போராட்ட குணமுடைய அரசியல்வாதிகளுக்கும் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.