நோன்பு மற்றும் பெருநாள் போன்ற விடயங்களில் நபியவர்கள் உலகளாவிய முஸ்லிம்களை நோக்கி பிறை கண்டு பிடியுங்கள் பிறை கண்டு விடுங்கள் என தெளிவாக சொல்லியிருப்பதன் காரணமாகவும் உலக முஸ்லிம்களின் தலைநகரமாக புனித மக்கா இருப்பதாலும் மக்கா பிறையை வைத்து நோன்பு மற்றும் பெருநாளை எடுக்க வேண்டும் என்பதே உலமா கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேலும் கூறியதாவது,
2005ம் ஆண்டு உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இக்கருத்தை நாம் சொல்வதுடன் இக்கருத்து அன்றைய சூழலில் இலங்கை முஸ்லிம்கள் பலரிடம் செல்லாத நிலை இருந்ததால் மக்கா பிறையை வைத்தே நோன்பு பிடிக்க வேண்டும் என்றும் தற்போதைக்கு வீண் பிரச்சினைகளை தவிர்க்குமுகமாக இலங்கை உலமா சபையின் அறிவித்தல் பிரகாரம் நோன்பு பிடிக்கலாம் என சொல்லி வந்தோம்.
தற்போது பிறை பற்றிய வாத பிரதிவாதங்கள் அனைத்து முஸ்லிம்களிடமும் சென்றுள்ளதாலும் பிறை பார்க்கும் விடயத்தில் உலமா சபை விட்ட தவறின் காரணமாக மக்கள் மத்தியில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டதாலும் இனியும் இதனை இப்படியே விட்டு விடாமல் இலங்கை முஸ்லிம்களினதும் உலகளாவிய முஸ்லிம்களினதும் ஒற்றுமையை கருத்திற்கொண்டு எமது நிலைப்பாட்டை நாம் பகிரங்கமாக சொல்வது எமது கடமையாகும்.
அந்த வகையில் உலமா கட்சி என்பது வெறுமனே அரசியலை மட்டும் செய்வதல்ல என்பதாலும் இஸ்லாமிய வழிகாட்டலையும் உண்மையையும் சொல்லும் கட்சி என்பதாலும் முஸ்லிம்கள் மக்கா பிறை கண்ட தகவலை ஏற்று தமது நோன்பு மற்றும் பெருநாட்களை எடுத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.