தூய்மையான நாளைக்கான ஹெலஉறுமய அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை கைது செய்துள்ளமை கூட்டு எதிரணியை முடக்கும் சதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான நாளைக்கான ஹெலஉறுமய அமைப்பின் தலைவரும் கூட்டு எதிரணியின் அங்கத்தவருமான உதய கம்மன்பில போலி குற்றச்சாட்டினை மையப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டினை தேசிய சுதந்திர முன்னணி வண்மையாக கண்டிக்கிறது.
அதேநேரம் நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக இல்லாதொழித்து மீண்டும் தீவிரவாத சக்திகளுக்கு உயிர்கொடுக்கும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. தேசத்திற்கு துரோகம் செய்யும் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.