பஷீர் சேகுதாவூத், ஹசன்அலி

நேரம் சரி இல்லாத காரணத்தினாலோ என்னவோ, அண்மைக்காலத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் சாத்தியமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் மூக்குடைபட்டிருப்பதாகவும் வேறு சில சந்தர்ப்பங்களில் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றும் குறிப்பிடலாம். 

குறிப்பாக, 'எழுத்துக்களின்' வலிமையை அண்மைக்காலத்தில் அவர் வெகுவாக புரிந்து கொண்டிருக்கின்றார். செயலாளர் எம்.ரி. ஹசன்அலி எடுத்து நிலைப்பாட்டுக்கு மேலதிகமாக, ஊடகங்களின் விமர்சனங்களும் தவிசாளர் பஷீர் சேகுதாவூதின் கடிதமும், அவர் கடுமையாக கீழிறங்கி வரும் நிலைமைக்குக் கொண்டு சென்றது. இன்று இத்தொடரில், மு.கா தவிசாளர் பஷீர் சேகுதாவூத் வெளியிட்டுள்ள மிகப் பிந்திய அறிக்கை, கட்சிக்குள்ளும் வெளியிலும் காரசாரமான வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. தேசியப்பட்டியல் விவகாரம், ஹசன்அலியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பிலான ரவூப் ஹக்கீமின் அறிக்கைகள் என எந்த விடயம் தொடர்பிலும், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

இதில் மிகக் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், பாலமுனையில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் நடைபெற்ற சம்பவமாகும். அப்போதிருந்த சூழலில், இம்மாநாட்டில் தவிசாளரும் செயலாளரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றே பலரும் கருதினர். ஆனால் பஷீர், வந்து அவமானப்பட்டார். இவ்வாறான களச்சூழலுக்கு மத்தியிலும் கட்சியின் நிறத்தைக் குறிப்பிடும் சேர்ட்டையும் தொப்பியையும் அணிந்து கொண்டு அவர், பாலமுனை தேசிய மாநாட்டுக்கு வந்திருந்தார். 

தனக்கு உரிய வரவேற்புக் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும், ஒரு மூத்த போராளி அதுவும் கட்சியின் தவிசாளர், ஒரு நிகழ்வுக்கு வருவது என்றால் அவர் எந்தளவுக்கு மனதைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் அவ்வாறு அம்மாநாட்டுக்கு வந்திருந்த பஷீர், பகிரங்கமாக குழுஉக்குறிகளால் விமர்சிக்கப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். ஒரு தேசிய மாநாட்டில் எத்தனையோ காத்திரமான விடயங்களைப் பேசி, தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய மு.கா தலைவர் ஹக்கீம், அவற்றைச் செய்யாமல், தேர்தல் காலத்தில் எதிர்த்தரப்பு வேட்பாளரை வசைபாடுவது போல, கட்சியின் அதிருப்தியாளர்களை வசைபாடும் ஓர் உப்புச் சப்பற்ற மேடையாக அதை ஆக்கியிருந்தார். 'குறுநில மன்னர்கள்', 'குள்ளநரிகள்' என்று ஹக்கீம் சொன்னது, யார் என்பதில் சில சந்தேகங்கள் இருந்தாலும் கட்சியின் நிறத்தைக் குறிக்கும் ஆடையை அணிந்து வந்து நாடமாடுவதாக அவர் சொன்னது, பஷீரையே என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. 

ஆனால், அப்போதும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. அவரது இந்த மௌனம், மிகவும் மர்மங்கள் நிறைந்ததாக இருந்ததுடன், அவர் தரப்பில் இருந்து என்ன நடக்குமோ என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்பும், பொதுமக்களுக்கு மட்டுமன்றி மு.கா தலைவருக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால், மாதங்கள் கடந்தும் அவர் மௌன விரதமிருந்தார். இம்முறை ஹசன் அலியை விடவும் மிக மோசமாக இலக்குவைத்து தாக்கப்பட்டவர் பஷீர் சேகுதாவூத் என்றே குறிப்பிட வேண்டும். அலிசாஹிர் மௌலானாவைக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான யோசனையை ஆரம்பத்தில் முன்வைத்தவர் பஷீர் என்றே கூறப்படுகின்றது. 

அவர் போட்டியிட்டால், அலிசாஹிரின் வெற்றி நிச்சயமற்றதாக ஆகிவிடும் என்ற காரணத்தினாலேயே தான் போட்டியிடும் வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாக பஷீர் கூறியிருக்கின்றார். அதற்குப் பகரமாக அவருக்குத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமை தருவதாக, ஹக்கீம் வாக்குறுதி அளித்திருந்தார். மு.கா தலைவர், தனது தாயாரின் முன்னிலையில் அவரைச் சாட்சியாக வைத்து, பஷீரின் கையைப் பிடித்து சத்தியம் செய்து கொடுத்தார். 

ஆனால், தேசியப்பட்டியல் எம்.பி பதவி அவருக்கு கிடைக்கவில்லை. ஹக்கீமின் கணக்கில், பஷீரையும் ஹசன் அலியையும் விட சல்மானும் ஹபீஸும் தனக்கு விசுவாசமானவர்களாகத் தெரிந்தார்கள் என்பதை, போராளிகள் இந்த இடத்தில் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அதனடிப்படையில், அதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பஷீருக்கு, போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை, தேசியப்பட்டியல் மூலம் எம்.பியும் கிடைக்கவில்லை. 

எனவேதான், மிக மோசமாகத் தாக்கப்பட்டவர் பஷீர் என்று சொல்கின்றோம். ஆனால், இவ்வளவு நடந்து பிறகும் மாதக்கணக்காக தவிசாளர், வாயைத் திறக்கவேயில்லை. பஷீர் சேகுதாவூத் எப்படிப்பட்டவர் என்பது, மு.காவின் அரசியல் பற்றி அறிந்தோருக்குத் தெரியும். அவர் அடிக்கொரு தடவை அறிக்கைவிட்டுக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டிருப்பவர் அல்லர். சத்தம்போடாமல் காய்களைக் கனகச்சிதமாக நகர்த்திக் கொண்டிருப்பவர். 

தமிழ் இயக்கமொன்றுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையிலேயே, முதன் முதலாக எம்.பியாகத் தெரிவு செய்யப்பட்ட அவர், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் என்று ஒருகாலத்தில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்களை அவர் பின்னர் கூறினார். அதேபோன்று, மு.கா தலைவருக்கு தெரியாமல் முன்னைய அரசாங்கத்திடம் இருந்து அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டதாக, கட்சிக்குள் ஒரு விமர்சனம் இருந்தது. கடைசியில், மஹிந்தவுக்கு அவர் எழுதிய கடிதம், சமூக வலைத்தளத்தில் கடுமையான மனக்கிலேசங்களை தோற்றுவித்திருந்ததையும் மறுக்க முடியாது. 

ஆனால், இந்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டோ, வேறு அடிப்படைகளிலோ அவர் கட்சியை கேவலப்படுத்தியதாக, முஸ்லிம் அடையாள அரசியலை அவர் நாசப்படுத்தியதாகக் குறிப்பிடுவது கடினமானது. அமைச்சுப் பதவியைப் பஷீர் சேகுதாவூத் பெற்றுக் கொண்டமை, கட்சியைப் பொறுத்தமட்டில் தர்மமா, இல்லையா என்பது ஒரு புறமிருக்க, அதை, தலைவர் அடியோடு விரும்பவில்லை. 

ஓர் உறையில் இரு வாள்கள் இருப்பதாக எண்ணினார். அன்றிலிருந்து, தவிசாளர் மீது கண் வைத்தார். அதனால் முரண்பாடுகள், மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கின எனலாம். இப்பேர்ப்பட்ட ஒருவரை, மு.கா தலைமை புறமொதுக்கிய வேளைகளில் பிரதிபலிப்பு எதையும் வெளிக்காட்டாமல் இருந்தமை, பெரிய சந்தேகங்களைத் தோற்றுவித்திருந்தது. பஷீர் என்ன செய்யப் போகின்றாரோ, அதன் தாக்கம் என்னவாக இருக்குமோ என்ற உள்நடுக்கம், மு.கா உயர்பீட உறுப்பினர்களுக்கே இருந்தது. இந்நிலையிலேயே, ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கும் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான பனிப்போர் வலுவடைந்திருந்தது. அப்போது, பஷீர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு, நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். 

தன்னுடைய போராட்ட வாழ்வு தொடங்கி, அரசியல் வாழ்வு தொட்டு, இன்று முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளையும் அதில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். செயலாளர் ஹசன் அலியின் பக்கம் தான் நிற்கவில்லை என்றும், நியாயம் ஹசன் அலியின் பக்கம் இருப்பதால், நியாயத்தின் பக்கம் நிற்கின்றேன் என்றும் அவர் அறுதியும் உறுதியுமாக குறிப்பிட்டிருந்தார். 

'பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிப்பது போல' கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்ட தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் குறித்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற மறைமுகச் செய்தியை, தலைவர் ஹக்கீமுக்கு இதன்மூலம் அவர் பகிரங்கமாகச் சொன்னார். அத்தோடு, அதிருப்தியாளர் அணியின் பக்கம் உயர்பீட உறுப்பினர்களை இழுத்தெடுப்பதற்கான காந்த சக்தியையும் இக்கடிதம் கொண்டிருந்தது. மு.கா தலைவர் செய்த கைங்கரியங்களை எல்லாம் இவர் இக்கடிதத்தில் பட்டியலிட்டு இருந்தமையாலும், தவிசாளரும் செயலாளரும் தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்தமையாலும், உயர்பீட உறுப்பினர்களுக்கு புதுத்தெம்பு பிறந்தது. 

கட்சிக்குள் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தியும், செயலாளரின் அதிகாரங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரியும், ஒரு தொகுதி உயர்பீட உறுப்பினர்கள் தலைவருக்குக் கடிதமொன்றை எழுதிக் கையொப்பமிடுவதற்கு, பஷீரின் கடிதம் முக்கிய காரணியாக அமைந்தது. அதுமட்டுமன்றி, இக்கடிதத்தின் பின்னர்தான், ஹசன்அலி தரப்பு மேலும் பலமடைந்ததுடன் ஹக்கீம் இறங்கி வரவேண்டிய இக்கட்டும் ஏற்பட்டது. தேசியப்பட்டியல் விடயத்தில் ஏமாற்றப்பட்டாலும், ஆரம்பத்திலிருந்தே அதனைக் கோருவதில் இருந்தும் பஷீர் விலகியிருந்தார். 

காத்திரமான கடிதமொன்றை எழுதியதைத் தவிர, பாரிய அறிக்கைகள் எதனையும் வெளியிடவில்லை என்றே சொல்லவும் வேண்டும். ஆனால் தலைவர் ஹக்கீம், அவருடன் தீண்டாமை அரசியலொன்றையே மேற்கொண்டு வருகிறார். அதாவது, பஷீர் என்பவர், ஹசன்அலி போன்று சாதுவாக இருந்து விட்டுப் போகின்ற ஒருவர் இல்லை என்பதை, ஹக்கீம் நன்கு அறிவார். 

வெளியில் அமைதியாக இருந்தாலும், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அநேக நகர்வுகளுக்கும் பஷீர் உந்து சக்தியாக இருக்கின்றார் என்ற வலுவான சந்தேகம் அவருக்கு உள்ளதாகக் கருதலாம். அதன் காரணத்தினாலோ என்னவோ, செயலாளருடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் தலைவர், தவிசாளர் பஷீருடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 

இதற்கு அடிப்படைக் காரணம், பஷீரின் கடிதத்தில் இருந்த உறைப்பான வரிகள் என்றும் கூறலாம். இவ்வாறான காலகட்டத்திலேயே, சில தினங்களுக்கு முன்னர் மிக முக்கியமான அறிக்கை ஒன்றை பஷீர் வெளியிட்டுள்ளார். பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து முழுமையாக விலகிக் கொள்வதாக, இதன் ஊடாக அவர் இந்த நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறார். 16 வருடங்களாக தலைமைப் பதவியையும் அமைச்சுப் பதவியையும் தன்வசம் வைத்துக் கொண்டு, 'பதவியாசை இருக்கக் கூடாது' என்று வார்த்தைகளால் ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் தலைவர் ஹக்கீமுக்கு, வெளியில் காயங்கள் தெரியாத அடியொன்றை பஷீர் பிரயோகித்துள்ளார். 

பேச்சுக்குத் தலைவர் சொன்னதை செயலில் காட்டியுள்ளார் தவிசாளர். இது, அண்மைக்கால முஸ்லிம் அரசியலில் நிகழ்ந்திராத ஓர் அபூர்வம் என்றும் கூறலாம். முன்னதாக, இப்போது தவிசாளரும் பதவி கோரப் போவதில்லை என்பதால், மறுபக்கத்தில் தேசியப்பட்டியல் பிரச்சினையில் இன்னும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளார் ஹக்கீம். பஷீர், இந்த அறிக்கையில் பல விடயங்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். 'இனிவரும் காலங்களில் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை' என்றும் 'தேசியப்பட்டியலில் இடம்பிடிக்கப் போவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார். 

தனது போராட்ட வாழ்வு தொடக்கம் இன்று வரை தனக்கு உதவியாக இருந்வர்கள்;, பொதுமக்கள் எல்லோருக்கும் தனது நன்றிகளைக் கூறியுள்ளார். மிக முக்கியமாக, 'முஸ்லிம் அடையாள அரசியல், தனது இனத்தின் பிரதான அரசியல் அபிலாஷைகளை பலிகொடுக்கும் அளவுக்குப் பலவீனப்பட்டுப் போயுள்ளது' என்று குறிப்பிட்டுள்ள பஷீர், 'முஸ்லிம் காங்கிரஸை தூய்மைப்படுத்தும் முயற்சியை' மேற்கொள்ளப் போவதாக, அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளார்.

ஈரோஸ் எனப்படும் ஈழப்புரட்சி அமைப்பில் இணைந்து செயற்பட்ட பஷீர், 1989ஆம் ஆண்டு தேர்தலில் அவ்வமைப்பு சார்பாக சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். அதன் பின்னர், 1994இல் மு.காவில் இணைந்து கொண்ட இவர், தேசியப் பட்டியல் மூலமும் மக்களால் தெரிவு செய்யப்பட்டும், பல தடவைகள் எம்.பியாக அங்கம் வகித்தார். இக்காலத்தில் பிரதியமைச்சர், அமைச்சரவை அந்தஸ்துள்ள, அந்தஸ்தற்ற அமைச்சுக்களும் இவருக்குக் கிடைத்தன.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். இப்பேர்ப்பட்ட ஒருவர், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு காலப்பகுதியில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவப் பட்டியலில் இருந்து விலகிக் கொள்வது மிகவும் கவனிப்புக்குரியது. பேரியல் அஷ்ர‡ப் தொடக்கம் அமீர் அலி வரை இடம்பெற்ற பிளவுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட வேளையிலும், வேறு பல பிழையான முடிவுகளை ஹக்கீம் எடுத்த நேரத்திலும் அவற்றில் சரி கண்டு, அவர் பக்கம் சேகுதாவூத் நின்றார். 'நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து விட்டுப் போங்கள். ஆனால், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷையில் தவறிழைக்கக் கூடாது' என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருந்திருக்கிறார் என்று அறிய முடிகின்றது. 

அப்படியென்றால், அவ்வாறானதோர் அத்துமீறிய நிலைமை, கட்சிக்குள் இப்போது ஏற்பட்டிருக்கிறது என்பதே இதன் உள்ளர்த்தமாகும். கட்சிக்குள் அநியாயங்களைம் தட்டிக் கேட்டால், ஜனநாயகம் பற்றிப் பேசினால் 'பதவிக்காகச் செய்கின்றார்கள்' என்றுதானே கூறிக் கொண்டிருக்கின்றனர். எனவே, அவ்வாறு சொல்ல முடியாத இக்கட்டான நிலையை, இவ்வறிக்கையானது மு.கா தலைமைக்கும் அவரது விசிறிகளுக்கும் ஏற்படுத்தியிருக்கின்றது. 

மு.கா தலைவரின் பல இரகசியங்கள் பஷீரிடம் இருக்கின்றன. அவரது 'பலவீனங்களை', தவணை அடிப்படையில் வெளியில் சொல்லியே தனது பக்கத்தை பஷீர் பலப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை விடுத்து வேறு மாதிரியான வழியில் புதுவித நகர்வொன்றை பஷீர் ஆரம்பித்திருக்கிறார். நோன்புப் பெருநாள் முடிந்ததும், இது இன்னும் சூடுபிடிக்கும். பஷீரின் பலம் எப்படிப்பட்டது என்பதையும், எம்.பிக்களான ஹரீஸையும், பைசல் காசீமையும் சில 'புதுவரவு'களையும் போல, பஷீர், ஹசன் அலி போன்றோரை இலேசாகக் கையாள முடியாது என்பதையும், சாணக்கியத் தலைவர் நன்கு அறிவார்

jaffnamuslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -