சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் மின்சாரத்தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த தேவையை நிறைவு செய்ய கச்சா எண்ணெய்யை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுவதால் அவ்வகையிலும் அந்நாடு பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
இந்த நிலையை மாற்ற, பல்வேறு பொருளாதார சிக்கனம் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக சவுதி மன்னர் முஹம்மது பின் சல்மான் தலைமையிலான நிபுணர்கள் குழு விரிவாக ஆலோசனை நடத்தியது. இதன் விளைவாக, மந்திரிசபையின் செலவினங்களில் ஒருபகுதியை குறைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான தேசிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் மற்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.
மேலும், வெளிநாட்டில் கடன் வாங்கும் நிலைக்கு சவுதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு சர்வதேச வங்கிகளில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடனை வாங்கினால் தான் நாட்டை நடத்திச்செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சவுதி அரசுக்கு சொந்தமான ‘அரம்கோ’ எண்ணைய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி பட்டத்து இளவரசரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான முஹம்மது பின் சல்மான் தற்போது முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக, கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எண்ணெய் வளத்தின் மூலமாக மட்டுமே நாட்டுக்கு வருமானம் என்ற பழக்கத்துக்கு பலகாலமாக நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம். இதனால், பலதுறைகளில் அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றத்தை நாம் எய்த முடியவில்லை.
இந்த மனநிலை மாற வேண்டும். எண்ணெய் வளத்தின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை மட்டுமே சார்ந்திராமல் பிறவகைகளிலும் வருமானத்தை ஈட்டக்கூடிய நாடாக வரும் 2020-ம் ஆண்டுக்குள் சவுதி அரேபியாவை முன்னேற்ற வேண்டியுள்ளது என்றார்.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நாடு தன்னிறைவையும் முதல் இடத்தையும் அடைந்தாக வேண்டும். அதற்கேற்ப, அரசுக்கு ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தில் உள்ள ஐந்து சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் மைய நிதி தொகுப்பு ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்ட சல்மான், ‘அரம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் ஒரு சதவீத பங்குகளை விற்பனை செய்தாலே உலக பங்குச் சந்தையில் வெளியாகும் பெரிய தொகைக்கான விற்பனையாக ‘அரம்கோ’ பங்குகள் இருக்கும் என்று கூறினார்.
தற்போது உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை விரைவில் 15-வது இடத்துக்கு கொண்டு வருவதற்கான பல்வேறு பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் கொண்ட கையேட்டை வெளியிட்ட அவர் உள்நாட்டு ராணுவ செலவினங்களும் வெகுவாக குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இளவரசர் சல்மானின் பரிந்துரைகளின்படி, புதிய பொருளாதார மாற்றுவழி திட்டம்-2020 தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய புனரமைப்பு என்ற இந்த திட்டத்தின்படி (The National Transformation Programme (NTP) 2020) வரும் 2020-ம் ஆண்டுக்குள் நான்கரை லட்சம் தனியார் நிறுவன பணிகளை உருவாக்க சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, கடந்த ஐந்தாண்டுகளுக்குள் அமல்படுத்தப்பட்டவுள்ள பொருளாதார மாற்றுவழி திட்டம்-2020 என்ற 112 பக்கங்களை கொண்ட கையேடு வெளியிடப்பட்டுள்ளது. அரசுசார்ந்த ஒவ்வொரு துறையும் வரும் ஐந்தாண்டுகளில் செய்து முடிக்க வேண்டிய இலக்குகள் அந்த கையேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசுசார்ந்த 24 துறைகளின் வாயிலாக 270 பில்லியன் ரியால் மதிப்பீட்டில் 543 புதிய முன்முயற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மீன்வளம் சார்ந்த தொழில்களை மேம்படுத்தும் வகையில் சர்வதேச மையம் அமைக்கப்பட்டு சுமார் 80 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பல தொழில்நகரங்களும் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் ஒன்றரை லட்சம்பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
அரசுசார்ந்த பொது செலவினங்கள் 40 சதவீதம் வரை குறைக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கான அனுமதி தொகை ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் குறைக்கப்படும் என தேசிய புனரமைப்பு திட்டம்-2020 வடிவமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த திட்டத்துக்கு சவுதி அரசின் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதியின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியானது நாளொன்றுக்கு 12.5 மில்லியன் பேரல்கள் என்ற வழக்கமான நடைமுறை தொடரும் எனவும் சவுதி அரசு அறிவித்துள்ளது.