எஸ்.அஷ்ரப்கான்-
எமது பிரதேச விளையாட்டு வீரர்கள் எவ்வளவுதான் திறமையுடையவர்களாக இருந்தாலும் அவர்கள் தேசிய மட்டத்தில் விளையாட வேண்டுமானால் கிரிக்கெட் சபையில் பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் பைஸால் காசீம் தெரிவித்தார்.
நேற்று கல்முனை சந்தாங்கேணியில் இடம்பெற்ற கிரிக்கெட் இறுதிப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அவர் மேலும் குறிப்பிடும்போது,
இங்கு எதுவித அரசியலும் எனக்கு கிடையாது. யார் இதற்காக முன்வந்தாலும் நானும் இணைந்து இந்த விடயத்திற்காக பாடுபடுவேன். கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் பிரதேசங்களில் மிகத்திறமைவாய்ந்த விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்றது. அதுபோல் சிறந்த திறமைவாய்ந்த விளையாட்டு வீரர்களும் இருக்கின்றார்கள். இவர்களது திறமைகள் தேசிய மயப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக இன்னும் சில வாரங்களில் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் முயற்சி எடுக்கவிருக்கிறேன். சம்மந்தப்பட்டவர்களுடன் இது விடயமாக பேசியும் இருக்கின்றேன்.
பொதுவாக ஜென்டில்மேன் விளையாட்டு என்பது எமது பிரதேசங்களில் கழகங்களால் மிகச் சிறப்பாக விளையாடப்பட்டு வந்தாலும் அதனால் உச்ச பயனை பெற வேண்டிய நிலை எமது வீரர்களுக்கு இருக்கின்றது. இன்றைய இறுதிப்போட்டியை பார்க்கின்றபோது உண்மையில் பிரதேசத்தின் ஒரு முன்னணி கழகம் ஒரு சிறந்த சமூக சேவையாளர் அரசியல் ரீதியாக தமிழ் முஸ்லிம் உறவுக்கு வித்திட்டவர் மர்ஹூம் பறக்கத் அவர்கள் அவர்களின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற இந்த சுற்றுப்போட்டியை றினோன் விளையாட்டுக்கழகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
இதனால் மறைந்த பறக்கத் அவர்களின் சேவைகள் ஞாபகப்படுத்தப்படுவதோடு அவரின் முன்மாதிரியும் இன்று ஞாபகப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில் அவரது குடும்பத்தினர் மற்றும் றினோன் விளையாட்டுக்கழகத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் நடாத்திவந்த மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணம்-2016 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பலத்த போட்டிக்கு மத்தியில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
றினோன் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் றிஷாட் சரீப் தலைமையில் நடைபெற்ற இவ்விறுதிப் போட்டியில் கல்முனையின் முன்னணி கழகங்களான றினோன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் மோதியது. கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் நடாத்திவந்த மர்ஹூம் பறக்கத் ஞாபகார்த்த கிண்ணம்-2016 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (2016.06.05) வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.
138 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ட் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் முடிவில் 123 ஓட்டங்களை பெற்று தோல்வி கண்டது. இதன் அடிப்படையில் 15 மேலதிக ஓட்டங்களால் வெற்றிபெற்று கல்முனை றினோன் விளையாட்டுக்கழகம் சம்பியனாக தெரிவானது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக எம். நிஸாம் தெரிவானார். சுற்றுப்போட்டியின் தொடர் நாயகன் விருது அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஏ.ஜே.எம். றிம்சாத்துக்கு வழங்கிவைக்கப்பட்டது.
வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நடுவர்கள் ஏற்பாட்டுக்குழு மற்றும் சிறப்பாக செயற்பட்ட கழகத்துக்கும் பாராட்டி கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.எம்.பைஸால் காசீம், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரீ.சரவாநன்தன், விசேட அதிதிகளாக பொறியியலாளர் ஹலீம் எஸ். முஹம்மட்,ஓய்வுபெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, கல்முனை லெஜன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எம்.ஜமால்டீன், றினோன் விளையாட்டுக்கழக தவிசாளர் ஏ.எம். பைரூஸ், சனிமௌண்ட் விளையாட்டுக்கழக செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப், ஆகியோர் உட்பட விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்களும் கலந்து சிறப்பித்தனர்.