நாட்டை ஆயுள் வரைக்கும் ஆள வேண்டுமென கங்கணம் கட்டி, அதற்காக யாப்பைக் கூட திருத்திக் கொண்டவர்கள் சிறுபான்மை மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் தந்துரோபாயமாக, பௌத்தர்களை கையிலெடுக்க மஹியங்கண விவகாரத்தை தற்போது ஊதிப் பெருப்பிக்க பொது பல சேனாவையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த கிழக்கின் எழுச்சி என்ற பேரில் முஸ்லிம் புல்லுருவிகளையும் பயன்படுத்துகின்றனர் என்று கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார மற்றும் தொழில் வாய்ப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.
தென்கிழக்குப் பலகலைக் கழக பட்டதாரிகள் மையத்தினால் அக்கரைப்பற்று கடற்கரைச் சோலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார் ஏ.எல்.தவம் அவர்கள்.
மேலும் அவர் அங்கு உரையாற்றும் போது,
இந்த ரமழான் மாதத்தில் இரண்டு மத சார் வன்முறைகளை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். ஒன்று முஸ்லிம்களுக்கு வெளியே இருந்து பொது பல சேனா என்ற பேரில் ஒரு மத வன்முறை. மற்றையது கிழக்கின் எழுச்சி என்ற பேரில் மேற்கொள்ளப்படும் சதிகளை ''புனிதப் போர்'' எனக்கூறி பத்ர் யுத்தத்தோடு ஒப்பிட்டு இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும் விதம் முஸ்லிம்களுக்குள்ளிருந்து மேற்கொள்ளப்படும் வன்முறை.
இரண்டு வன்முறைகளினதும் நோக்கம் ஒன்றுதான். அதிகாரத்தைக் கைப்பற்ற மதத்தைக் கையில் எடுப்பதுதான் இரண்டு தரப்பினரின் நோக்கமே அன்றி வேறு இல்லை. முஸ்லிம்கள் இரண்டு குறித்தும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இரு தரப்பினரும் தங்களுக்கான பதவிகளை அடைந்து கொள்வதற்கு நமது மதத்தை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
இதே போன்று, இந்த வன்முறையாளர்கள் இரண்டு பேருக்கும் இன்னுமொரு ஒற்றுமையும் இருக்கிறது.
இவர்கள் இரண்டு பேருக்கும் பின்னால் முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் ஒரே சக்தியே இருப்பதாகவும் நம்பப்படுகிறது. நாட்டை ஆயுள் வரைக்கும் ஆள வேண்டுமென கங்கணம் கட்டி, அதற்காக யாப்பைக் கூட திருத்திக் கொண்டவர்கள் இறுதியில் சிறுபான்மை இனத்தவர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகளை பலவீனப்படுத்துவதனூடாகத்தான் அதனைச் சாத்தியப்படுத்தலாம் என்பதால் மீண்டும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.
அவர்களால் முஸ்லிம் சமூகத்தினுள் நேரடியாக இறங்கி காரியத்தை முடிக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு, அவர்களின் கைக்கூலிகளை களமிறக்கியுள்ளனர். அதனால் தான் பௌத்தர்களை கையிலெடுக்க மஹியங்கண விவகாரத்தை ஊதிப் பெருப்பிக்க பொது பல சேனாவையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த கிழக்கின் எழுச்சி என்ற பேரில் முஸ்லிம் புல்லுருவிகளையும் பயன்படுத்துகின்றனர்.
அண்மையில் கிழக்கு முதலமைச்சர் தன்னை அவமானப்படுத்திய கடற்படை அதிகாரியைக் கடிந்து கொண்டதையும் பூதாகரமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் இதே பின்னணியிலேயேதான் என்பதை நாம் அவதானிக்கலாம். எனவே முஸ்லிம்கள் இவ்விடயங்களில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் மேலும் அவர் கூறினார்.