வீடுகளை இழந்த அனைவருக்கும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசின் இலக்கு மன்னார் பெரியகடையில் றிசாத்

யுத்தத்தினால் வீடுகளை இழந்து, இருப்பிடமின்றி வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் பெரியகடையில், மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று (25/06/2016) பிரதம அதிதியாகப் பங்கேற்று அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் இங்கு உரையாற்றுகையில்;

யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்கியதால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அநேகர் வீடுகளை இழந்தனர். அந்த வகையில் மன்னாரில் வாழும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டு தமது வீடுகளையும், சொத்துக்களையும் இழந்தனர். யுத்தத்தினால் பல வீடுகள் அழிந்தன. இன்னும் பல வீடுகள் அழிக்கப்பட்டன. சொத்துக்களை இழந்தவர்கள் அழிக்கப்பட்ட தமது வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். 

கடந்த காலங்களில் உலக வங்கி வடக்கு, கிழக்கு புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் பல வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. ஆனால் மீண்டு மீண்டும் ஏற்பட்ட மோதல்களால் அந்த வீடுகளும் அழிந்த வரலாறுகள் இருக்கின்றன. அதேபோன்று ஐரோப்பிய யூனியன், இந்திய அரசாங்கம் ஆகியவையும், காலத்துக்குக் காலம் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கின்றன. எனினும் வடக்கிலே இன்னும் 130,000 வீடுகளுக்கான தேவை தமக்கிருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகவும் இருக்கின்றது.

65000 வீடுகளை அமைப்பதற்கான கருத்திட்டம், அரசியல் கருத்து வேறுபாடுகளின் காரணமாக காலதாமதமாகிக் கொண்டிருப்பது வேதனையானது. எனினும், இதனை வெகுவிரைவில் சரிசெய்ய முடியுமென நான் பெரிதும் நம்புகின்றேன்.

மன்னார் நகரத்தைப் பொறுத்தவரையில் நான் நடந்து திரிந்த இடம். பாடசாலைக் காலங்களில் மன்னார் நகருக்கு நான் அடிக்கடி வந்து போவதுண்டு. எனது தந்தையார் கூட மன்னார், பெரியகடையில் கடையொன்ற வைத்திருந்தார். 

நான் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்குப் பணியாற்றக் கூடிய சக்தி கிடைத்தபோது, மன்னார் நகரை அழகுபடுத்த பலமுறை முயன்றேன். இந்த நகரத்தை நவீன நகராக மாற்றுவதற்கும், இங்கு மக்களின் பாவனைக்கென நகரமண்டபம் ஒன்றை கட்டுவதற்கும் நான் பலமுறை முயற்சி செய்தேன். எனினும், நகரசபையை நிருவகித்த அரசியல்வாதிகள் ஏனோ எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தனர். அமைச்சராக இருக்கும் எனக்கு நகராட்சியினரின் ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் இந்த நகரை நவீனமயப்படுத்தி இருப்பேன். 

நமக்குள் அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலன் என்று வரும்போது விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்படுவதே காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அத்தனையையும் இழந்து வாழும் நமது சமூகத்தை முன்னேற்ற, சில்லறைப் பிரச்சினைகளைக் களைந்துவிட்டு, ஐக்கியமாக செயற்பட வேண்டுமென நான் அன்பாகக் கோருகின்றேன். இதன் மூலமே மன்னார் மாவட்டத்தின் வீட்டுப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை ஆகியவற்றைத் தீர்த்துவைக்க முடியும் என்பதே எனது பணிவான கருத்தாகும் என அமைச்சர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -