ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்மீது கடுமையாகப் பேசியிருக்கமாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒரு சில சமூக ஊடகங்களும் பத்திரிகைகளும் எமக்குள் உள்ள பிரச்சினையை மேலும் பூதாகரமாக்க முயற்சிக்கின்றன என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கட்சியின் செயலாளர் மீது கடுமையாகப் பேசியதாக வெளிவந்த செய்திகள் தொடர்பில் கருத்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கட்சிக்கு கிடைத்த பலகோடி ரூபாய்களை தலைவர் சுருட்டிக் கொண்டதாக நான் பொய்களைப் பரப்பி வருவதாக தலைவர் அந்தக் கூட்டத்தில் பேசியதாகவும் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து கொண்டு இவ்வாறான பொய் வதந்திகளைப் பரப்ப வேண்டிய தேவை எனக்கில்லை. நான் எப்போதும் கட்சியை நேசிப்பவன்.
அதை என் உயிரிலும் மேலாகக் கருதுகிறேன் என்றார். பரப்பப்பட்டுள்ள செய்திகளுக்கு நீங்கள் மறுப்புத் தெரிவித்திருக்கிறீர்களா? என்று ‘விடிவெள்ளி” வினவியது அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
"கோள் காவி திரிபவர்களின் கூற்றைப் பெரிதுபடுத்தி அதைப்பற்றி வேறெதுவும் கூறவிரும்பவில்லை" என்றார்.