தெஹிவளை பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளை தொடர்ந்து ஒருவார காலம் முன்னெடுப்பதற்கு நேற்று முன்தினம் (06) திங்கட்கிழமை அனுமதி வழங்கியிருந்த பொலிஸார் அன்று இரவு மீண்டும் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகளுக்கு தடைவிதித்தனர்.
திங்கட்கிழமை இரவு இரண்டு பொலிஸ் ஜீப் வண்டிகளில் பள்ளிவாசலுக்கு வருகை தந்த பொலிஸாரே விஸ்தரிப்பு பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.
அப்பகுதியிலுள்ள பெளத்த தேரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதனாலே தடை விதிப்பதாகவும் கூறினர்.
பாத்யா மாவத்தை பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு பொலிஸார் தொடர்ந்து தடைவிதிப்பது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் என்போர் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்காவிடம் முறையிட்டனர்.
அமைச்சர் சாகல ரத்னாயக்க விஸ்தரிப்பு பணிகளைத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன், பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து விஸ்தரிப்புப் பணிகளைப் பார்வையிட்டனர்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே பிரதிப் பொலிஸ்மா அதிபர் பள்ளிவாசல் விஸ்தரிப்புப் பணிகளை ஒருவார காலம் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கொஹுவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்போர் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் தரப்பில் நிர்வாகிகள், அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பெளசி, பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் மற்றும் அசாத்சாலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். எதிர்த்தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை.
திங்கட்கிழமை இரவு பள்ளிவாசலுக்கு வருகைதந்த பொலிஸார் விஸ்தரிப்பு பணிகளுக்கு தடைவிதித்ததுடன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும் அச்சுறுத்தினர்.
இந்தச் செய்தி எழுதப்படும் வரை பள்ளிவாசல் விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
விஸ்தரிப்புப் பணிகள் முற்றுப் பெறாததால் பள்ளிவாசல் தரை விரிப்புகள் மழை நீரினால் நனைந்து தராவீஹ் தொழுகையை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் விவகாரம் ஜனாதிபதி, பிரதமர், சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
விடிவெள்ளி ARA.Fareel-